இப்போது நாட்டின்வளர்ச்சி என்பதே நம் முன்பு உள்ள முக்கிய பிரச்னை, எனவே நாட்டின் முன்னேற்றத் திற்காகவே பாஜக.,வுடன் கூட்டணி சேர்ந்தேன். என்று லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தில், காங்கிரஸ் கூட்டணியிலிருந்த பஸ்வான் சமீபத்தில் பாஜக கூட்டணியில் சேர்ந்தார். இது குறித்து கருத்துதெரிவித்த பஸ்வான், ‘நாடுமுழுவதும் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவான அலை வீசிக்கொண்டு இருக்கிறது.

அரசியல்வாதிகள் பேசும் மதச் சார்பின்மை, மதவாதம் என்பது எல்லாம் தேர்தல்நேரத்தில் மக்களை ஏமாற்றும் தந்திரம். குஜராத்தில் கலவரம் நடந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இப்போது அந்த மாநிலம் முன்னேறியுள்ளதா? இல்லையா என்பதே இப்போது நாட்டின் முன்புள்ள விவாதம்.

லாலு பிரசாத் யாதவும், நிதீஷ் குமாரும் அவசரநிலை பிரகடனம் செய்தநேரத்தில், ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கத்தால் உருவானவர்கள். இவர்கள் ஒரு காலத்தில் பேசியபோது, ‘காங்கிரசுக்கு போவதைக் காட்டிலும் விஷத்தை தேர்ந்தெடுப்போம்’ என கூறினார்கள். இப்போது இருவரின் நிலையையும் பார்த்து கொள்ளுங்கள். இங்குள்ள ஒருகட்சி தலைவரின் கொள்கையெல்லாம் ‘ஹோலி பண்டிகைக்கு முன்னர் எரிந்து போகும். கடந்த 2005ம் ஆண்டு தேர்தலின்போது முஸ்லிம் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க நான் கூறியபோது அவர் பின்வாங்கினார்’ என்று லாலு பிரசாத் யாதவை பெயரைக் குறிப்பிடாமல் தாக்கி பேசினார்.

மேலும், ‘இப்போது வளர்ச்சி என்பதே நமக்கு முன்புள்ள முக்கிய பிரச்னையாகும். அதுவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு என்னை அழைத்துச் சென்றது. பாஜ அணியில் இருந்தாலும், லோக்ஜனசக்தி எப்போதும் மதச்சார்பின்மை உள்ள கட்சியாக இருக்கும். தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிகமானோர் வந்து சேர்வர். இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறும்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply