எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல்முடிவுகள் இதுவரை சுதந்திர இந்தியாவில் ஏற்படாத முடிவுகளாக நம் கதவைத்தட்ட காத்திருக்கின்றன. ஊழல் மயமாகிவிட்ட ஐ.மு.கூட்டணி அரசை நடத்தும் காங்கிரஸ்கட்சி படுதோல்வி அடையப் போகிறது. அக்கட்சிக்கு இந்தியா முழுவதும் இரட்டை இலக்கவெற்றிதான் கிடைக்கும். நூறு இடங்களை நெருங்கமுடியாது என்று தில்லி வழக்குரைஞர் மாநாட்டில் வைகோ முழங்கியுள்ளார்.

புதுடில்லியில் தல்கோட்ரா உள்விளையாட்டு அரங்கத்தில், வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி தலைமையில், நரேந்திரமோடிக்காக வழக்குரைஞர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் வைகோ உரையாற்றியதாவது" இங்கு நடைபெறும் வழக்குரைஞர்கள் மாநாடு இந்தியாவின் அரசியல்வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இடம்பெறும்.

புகழால் உயர்ந்த சிகரங்களை ஒருவர் அடையவேண்டுமெனில், 'சகாக்கள் தூங்கும் போதும், கண்விழித்துக் கடுமையாக உழைப்பதனால் மட்டுமே உயரமுடியும்' என்று கவிஞர் லாங் பெல்லோ பாடினார்.

நரேந்திரமோடி இத்தகைய கீர்த்தியை அடைந்ததற்கு அவரது கடுமையான உழைப்பும், மக்களுக்காக செய்த அர்ப்பணிப்புச்சேவையும், அஞ்சாத துணிச்சலும், பொதுவாழ்வில் எவறும் குற்றம்சொல்ல இயலாத நேர்மையுமே காரணம் ஆகும்.

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகள் இது வரை சுதந்திர இந்தியாவில் ஏற்படாத முடிவுகளாக நம் கதவைத்தட்ட காத்திருக்கின்றன. ஊழல் மயமாகிவிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை நடத்தும் காங்கிரஸ்கட்சி படுதோல்வி அடையப்போகிறது. அக்கட்சிக்கு இந்தியாமுழுவதும் இரட்டை இலக்க வெற்றிதான் கிடைக்கும். நூறு இடங்களை நெருங்க முடியாது. ஆனால் நரேந்திர மோடிக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கினால், பாஜக மட்டுமே ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கும் அதிகமான வெற்றிகிடைக்கும்.

மறு மலர்ச்சி பெறுகிற இந்தியாவாக, புதிய விடியல்காணும் இந்தியாவாக, நரேந்திரமோடி அமைக்கின்ற அரசு வார்ப்பிக்கும் என நம்புகிறேன். மாநிலங்களுக்கு உரிய உரிமைகளையும், அதிகாரங்களையும் வழங்குகின்ற கூட்டாட்சி கொள்கைக்கு மோடி அரசு உத்தரவாதம் தரவேண்டுகிறேன். தரும் என நம்புகிறேன். அனைத்து சமயங்களையும் சமமாக மதித்து நடத்துகின்ற மதச்சார்பற்ற தன்மையை மோடி அரசு பாதுகாக்கவேண்டும் எனக் கோருகிறேன். பாதுகாக்கும் என நம்புகிறேன். அமையப்போகும் மோடி அரசு, நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுகிறேன்.

தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தமட்டில், காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் மன்னிக்கமாட்டோம். இலங்கை தீவில் இலட்சக் கணக்கான தமிழர்களை, சிங்கள ராஜபக்சே அரசு இனப் படுகொலை செய்வதற்கு ஆயுதங்களைத் தந்து, அனைத்து உதவிகளையும் செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை, அதற்குத் தலைமையேற்ற காங்கிரஸ்கட்சியை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்.

அடல்பிஹாரி வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருந்தபோது, 'இலங்கை தீவில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு இந்திய அரசு எந்த உதவியும் செய்யாது, ஆயுதங்களையும் விற்காது' என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரகடனம்செய்தார். நாளை மலரப்போகின்ற நரேந்திரமோடி அரசு, ஈழத்தமிழர் பிரச்சினையில் வாஜ்பாய் அவர்களின் அணுகு முறையை பின்பற்ற வேண்டுகிறேன்.

நரேந்திர மோடிக்கு வெற்றி! தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி! அதை அடைவதே நமது இலக்கு!" என வைகோ உரையாற்றினார்.

Leave a Reply