பா.ஜ.க நண்பர்கள் குழு சார்பில் மோடியை பிரதமர் ஆக்குவோம் என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்தகருத்தரங்கில் கலந்துகொண்ட வெங்கைய நாயுடு காங்கிரஸ் ஆட்சியில் பஞ்ச பூதத்திலும் ஊழல் நடந்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதில் பட்டதாரிகள், வக்கீல்கள், பலதுறைகளில் பணியாற்றுபவர்கள், கலைத் துறையை சார்ந்தவர்கள், அறிஞர்கள், தொழில் அதிபர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:_

இந்தியாவின் எதிர் காலத்தை பார்த்து சிந்தித்து எந்த மாதிரியானகட்சி ஆட்சிக்கு வரவேண்டும், எந்தமாதிரியான தலைவர் பிரதமராக வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும். அதற்குரிய தகுதியும், திறமையும் நரேந்திர மோடிக்கு உண்டு.

தற்போது இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. உடனடியாக மோடியால் அதை நிவர்த்திசெய்ய முடியுமா? என்றால் அதை செய்து காட்டும் சக்தி அவரிடம் உள்ளது.

ப.சிதம்பரத்துக்கு ஒன்றுசொல்வேன். பொருளாதாரத்தில் பின்தங்கி ரூபாயின் மதிப்பும் குறைந்துவிட்டது. உலக அளவில் இந்தியர்கள் மீதான மதிப்பை காங்கிரஸ் குறையசெய்து விட்டது.

அண்டை நாடுகள் எல்லாம் நம்மை சீண்டிப் பார்க்கின்றன. பொருளாதாரவளர்ச்சி இல்லை. விலைவாசி அதிகரித்துவிட்டது. மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளார்கள். எனவே புதியமாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

நான் நாடுமுழுவதும் சுற்றி வருகிறேன். விமான நிலையம், ரெயில்நிலையம், டீக்கடைகள் என எல்லா இடங்களிலும் ஒரேவிஷயத்தை பேசுகிறார்கள். அது மோடி பிரதமராகவேண்டும் என்பதுதான். அவர் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 3வது அணி என்பது எடுபடாது. பலமாநில கட்சி தலைவர்கள் பிரதமர் என்கிறார்கள். அந்த எண்ணம் அர்த்தமற்றது. 3வது அணி கானல் நீர் போன்றது.

பாஜக.,வை தீண்டத்தகாத கட்சி என்கிறார்கள். ஆனால் ஒருகட்சியும், இன்னொரு கட்சியும் பேசிக்கொள்ளாமல் இருந்துவிட்டு அவர்கள்தான் இப்படி பேசுகிறார்கள். நாடுமுழுவதும் ராமர் என்பது எல்லோரது பெயரிலும் இருக்கிறது. அதை தீண்டத்தகாதவர் என்று சொல்லமுடியுமா?

ராமசாமி நாயக்கர்பெயரிலும் இருக்கிறது. ராம்விலாஸ் பஸ்வான் பெயரிலும் இருக்கிறது. சீதாராம்யெச்சூரி பெயரிலும் இருக்கிறது. ராமர் என்பது கடவுள் மட்டுமல்ல, இந்தியாவின் அடையாளச்சின்னம். மதம் என்பது அவரவர் விருப்பத்தைபொறுத்தது. அனைவரும் இந்தியன் என்ற உணர்வோடு செயல்படவேண்டும்.

நரேந்திரமோடிக்கு சாதனை பட்டியல் உள்ளது. காங்கிரசுக்கு ஊழல்பட்டியல் உள்ளது. எனவே நாடுமுழுவதும் மோடி அலை வீசுகிறது. தமிழ்நாட்டிலும் 1967_க்கு பிறகு திமுக., அதிமுக., காங்கிரஸ் என்று கூட்டணி அமைந்தால்தான் ஜெயிக்கமுடியும் என்ற நிலை இருந்தது.

முதல் முறையாக பா.ஜ.க, தேமுதிக., பாமக., மதிமுக., ஐஜேகே, கொங்குநாடு உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து ஒருமாற்று அணியை உருவாக்கி இருக்கிறது. இந்த அணியின் மூலம் நிறைய எம்பி.க்களை டெல்லிக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று அவர் பேசினார்.

Leave a Reply