என் தந்தை, அவரது ஆரம்ப பள்ளி காலத்தில் இருந்த ஒரு பொருளாதார நிலையை பற்றி, அடிக்கடி என்னிடம் கூறுவார். ""இந்தியாவின் சுதந்திரத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் ஜவுளி பற்றாக்குறை இருந்தது. இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும், ஆண்களுக்கு குறிப்பிட்ட அளவிற்கு காடா துணியும், பெண்களுக்கு தலா இரண்டு, மூன்று சேலைகளும் அரசு வினியோகித்தது,'' என்று கூறுவார்.

சுதந்திரத்திற்கு பின், ஜவுளி துறை பெரும் அளவிற்கு முன்னேறி இருக்கிறது. இதனால், ஜவுளி பற்றாக்குறை மறைந்திருக்கிறது. இதன் காரணமாக தான், இன்றைக்கு, ஜவுளி ஆடைகள், ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படுவது இல்லை. ஆனால், இன்றும், பல பொருட்களுக்கு தட்டுப்பாடும், பற்றாக்குறையும் உள்ளது. இது, 60 ஆண்டு காலமாக நம்மை ஆட்சி செய்தவர்களின் சூழ்ச்சி என்று, கூறலாம்.

முதலில், அனைத்திற்கும் "லைசென்ஸ்' பெற வேண்டும் என்று, பொருட்கள் உற்பத்திக்கு தடை விதித்தனர். அந்த தடையால் வரும் பற்றாக்குறையை தீர்க்க, அரசு, வினியோக திட்டத்தை அறிவித்தனர்.

மாற்று சிந்தனை : இது தான் நம் நாட்டின் இடதுசாரி பொருளாதார நிபுணர்களின் சிந்தனை. ஆனால், சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்! அதாவது, உற்பத்தி இல்லாவிட்டால், ஏது வினியோகம்?

பற்றாக்குறை இருந்தால் தான் ஏழை. ஏழையாக  இருந்தால் தான், இடதுசாரி சிந்தனை வலுக்கும். அதாவது, மக்களை ஏழைகளாக வைப்பதற்கும் இடதுசாரி சிந்தனைக்கும் பெரும் நெருக்கம். இடதுசாரிகள், 60 ஆண்டு காலமாக, வறுமையை தான் வினியோகித்து வருகின்றனர். இதற்கு மாற்று சிந்தனை தான் நரேந்திர மோடி. கடந்த 2007ல், அவரை பேட்டி காண, ஒரு அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது, அவரிடம், "உங்கள் ஆட்சி காலத்தில், பெரும் சாதனை என்ன?' என்று, கேட்டேன். அதற்கு, அவர், "கிராமங்களில் உள்ள எல்லா வீடுகளுக்கும், மும்முனை மின்சார இணைப்பு, 24 மணி நேரத்திற்கும் கிடைக்க செய்தது தான்' என, மகிழ்ச்சியோடு தெரிவித்தார். அப்போது, இதை நான் உடனடியாக நம்பவில்லை.

கடந்த 2003 – 04ல் ""அனைத்து கிராமத்து வீடுகளுக்கும் 1,000 நாட்களில் மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும்,'' என, குஜராத் சட்டசபையில் மோடி தெரிவித்தார். அப்போது, அவரது நண்பர்கள், "இந்த விஷ பரீட்சை வேண்டாம்' என்று, அறிவுரை கூறினர். "கடந்த, 50 ஆண்டு காலமாக, காங்கிரஸ் அரசால், மும்முனை மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று சிந்திக்க முடியவில்லை. ஆனால், 1,000 நாட்களில் எப்படி நிறைவேற்றுவீர்கள்?' என்று, பலரும் மோடியிடம் கேட்டனர்.

இது குறித்து, பின்பு பேசிய மோடி, ""அவர்களிடம் கூறியதை நடத்தி காட்டி விட்டேன்,'' என, உற்சாகமாக தெரிவித்தார். அதையும் நான் நம்பாததால், அவர் கூறியதை சோதனைக்கு உட்படுத்தினேன்.

காங்கிரசாரிடம் இதை பற்றி கூடுதல் தகவல் கேட்டேன். அவர்கள், "மோடி பொய் சொல்கிறார். மும்முனை மின் இணைப்பு, எல்லா கிராமத்திற்கும் கிட்டிய போதிலும், ஒரு சில கிராமத்தில், அவ்வப்போது, மின்வெட்டு ஏற்படுகிறது' என்று, கூறினர்! அவர்கள், ஹாஸ்யமாக சொன்னார்களா அல்லது ஆச்சரியமாக சொன்னார்களா என்று, எனக்கு புரியவில்லை. அதே கால கட்டத்தில், பல மாநிலங்களில், இலவச மின்சாரம் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. அந்த மாநிலங்களில் ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகளால்,

இலவச மின்வெட்டை மட்டுமே கொடுக்க முடிந்தது. இதில் இருந்து, இரண்டு விதமான சித்தாந்தங்கள் நம் முன் தோன்றுகின்றன. ஒன்று, மோடியின் சித்தாந்தம்: 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும்; ஆனால், எந்த தரப்பினருக்கும் இலவசம் கிடையாது. இரண்டாவதாக இடதுசாரிகளின் சித்தாந்தம்: இலவசம் என்ற அறிவிப்பு மட்டுமே இருக்கும். ஆனால், மின்சாரம் இருக்காது. வரும் லோக்சபா தேர்தல், மேற்கண்ட சித்தாந்தங்களுக்கு இடையே நிகழும் போட்டி. கடந்த 60 ஆண்டு காலமாக, மக்களை ஏழையாக வைத்து, ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம் என்று, திட்டங்களை வகுத்து, அந்த திட்டங்களுக்கான பணத்தில் இருந்து சுரண்டி பிழைக்க பலர் பழகிவிட்டனர். இப்படி சுரண்டி பிழைக்கும் பெருச்சாளிகளின் வாழ்வாதாரத்தை மோடியின் வருகை கேள்விக்குறியாக்குகிறது. அதனால் தான், மோடியின் வளர்ச்சிக்கு இவ்வளவு எதிர்ப்பு.

சிவப்பு பூனையாக… : சீனாவின் மாபெரும் தலைவர் டெங், ஒரு முறை பொருளாதாரத்தை அற்புதமாக விளக்கி பேசுகையில், ""பூனை, கறுப்பா, சிவப்பா என்று, எனக்கு கவலை இல்லை. ஆனால், பூனை, எலியை பிடிக்க வேண்டும்,'' என்றார். 60 ஆண்டு காலமாக, நம் பொருளாதார சிந்தனையாளர்கள், "பூனை, எலியை பிடித்தாலும், பிடிக்காமல் போனாலும் பரவாயில்லை, அது சிவப்பு பூனையாக இருக்க வேண்டும்' என்று, வாதாடி வருகின்றனர். இதன் விளைவாக, இன்றைக்கு, நாட்டில் பெருச்சாளிகள் தொல்லை தான் மிச்சம். இந்த பெருச்சாளிகள் தான், மோடிக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவரின் பலம் மக்களிடம் தான் இருக்கிறது. வரும் லோக்சபா தேர்தல் இதை வலியுறுத்தும்.

நன்றி ; தினமலர்

Tags:

Leave a Reply