ராகுல் காந்தியின் குஜராத் பேச்சின் சில பகுதிகளை கேட்டேன். நரேந்த்ர மோதியை அடால்ஃப் ஹிட்லருடன் ஒப்பிட்டுள்ளார். 1975-ல் அவர் பாட்டி திருமதி.இந்திரா காந்தி உள்நாட்டில் எமெர்ஜன்சி அமல்படுத்திய போது அவர் சிறுகுழந்தையாக இருந்திருப்பார். அந்த 19 மாத எமர்ஜென்சி காலம் பற்றி அவருக்கு விவரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நான் அப்போது கல்லூரி மாணவன். மாணவர் சங்க தலைவனாகவும், ஜெயபிரகாஷ் நாராயணின் JP இயக்கத்தில் தொண்டனாகவும் இருந்ததால் அந்த 19 மாதங்களும் நான் தடுப்புக் காவலில் சிறையில் வைக்கப்பட்டேன். அப்போது 'இரு எமெர்ஜென்சிகளின் கதை' எனும் ரகசியமாக நடத்தப்பட்ட சிற்றிதழ் ஒன்றை படிக்க நேர்ந்தது. அது ஸ்ரீ.எல்.கே.அத்வானி அவர்களால் எழுதப்பட்டது என்பது பின்னர்தான் தெரிய வந்தது. அந்த ஆவணம் இப்போது கூட, அவருடைய சிறை வாழ்க்கை நினைவுகளின் தொகுப்பாக வெளிவந்த 'ஒரு சிறைவாசியின் கிறுக்கல்கள்' (A Prisoner's Scrap Book) நூலில் இணைப்பாக உள்ளது. வில்லியம் ஷைரர் எழுதிய நாஜி ஜெர்மனியை அடிப்படையாக கொண்டது அந்த ஆவணம். ஷைரர் எழுதிய புத்தகத்தின் தலைப்பு 'மூன்றாம் சாம்ராஜ்யத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்'. சிறையிலிருந்த நானும் அந்த புத்தகத்தை வரவழைத்து சில வாரங்கள் செலவிட்டு படித்தேன். அதை படித்தபின் சந்தேகமில்லாமல் எனக்கு தோன்றியது, சுதந்திரத்திற்குப்பின் ஹிட்லரின் தாக்கத்தை கொண்ட ஒரே அரசியல்வாதி என்றால் அது திருமதி.இந்திராகாந்திதான். ஹிட்லருடன் என் மனம் ஒப்பிட்டது என்னையே திடுக்கிட வைத்தது.

1933 ஜனவரியில் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார். ஒரே மாதத்தில் 'மக்களையும் அரசையும் பாதுகாக்க' என கூறிக்கொண்டு எல்லா எமெர்ஜன்சி அதிகாரத்தையும் கையிலெடுத்துக்கொண்டார். தனிமனித சுதந்திரம், பேச்சுரிமை, அடிப்படை உரிமைகள் போன்றவற்றில், உரிமைக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார் எமர்ஜென்சி அமல்படுத்த வெளிக்காட்டிக்கொண்ட காரணம் என்னவென்றால் அரசு கட்டிடங்களை சுட்டெரிக்க கம்யூனிச சதி நடக்கிறதாம். எமர்ஜென்சி அமல்படுத்தபட்டதற்கு முன்தினம் பாராளுமன்றத்தில் தீப்பற்றி எரிந்ததை ஒரு சாக்காக சொன்னார். பின்னர் நுரெம்பேர்க் விசாரணையில் தெரிய வந்தது அது ஓர் இட்டுக்கட்டப்பட்ட சாக்கு என்று.

1975, ஜூன் 26ஆம தேதி, இந்திரா காந்தியும் எமர்ஜென்சி அமல்படுத்தினார். ஆயுதமேந்திய படையினர் சட்டத்துக்கு புறம்பான உத்தரவுகளை எதிர்க்கும் போராட்டத்தை JP இயக்கம் முன்னெடுத்து செல்வதுதான் காரணம் என்றார். வாழ்வுரிமை, சுதந்திரம் உட்பட எல்லா அடிப்படை உரிமைகளையும் ரத்து செய்துவிட்டார். பத்திரிக்கை தணிக்கை முறையை அமல்படுத்தி நீதியின் சுதந்திரத்தையும் சமரசம் செய்ய வைத்துவிட்டார். அவருடைய அட்டார்னி ஜெனரல் உச்சநீதிமன்றத்தில், 'வாழ்வுரிமை, சுதந்திரம் இல்லாத பட்சத்தில் சிறைக்காவலில் இருப்போர் அங்கேயே கொல்லப்படக்கூடும், தனக்கு மாற்று வழியில்லை' என்று இறைஞ்சுகிறார். நெகிழ்ந்த உச்சநீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்றது.

இந்திரா 20 அம்ச பொருளாதார திட்டத்தை அறிவித்து, ஒழுங்கின்மைக்கு எதிராகவும், முன்னேற்றத்திற்காகவும் தான் எமெர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது என்று வலியுறுத்தினார். ஹிட்லரும் இதேபோல 25 அம்ச பொருளாதார திட்டத்தை எமெர்ஜன்சி காலத்தில் அமல்படுத்த வைத்தார்.

ஹிட்லருக்கு ஜெர்மன் பாராளுமன்றத்தில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மை இருந்திருக்கவில்லை. அதனால் அவர் 91 எதிர்க்கட்சி எம்பிக்களை காவலில் அடைத்துவிட்டு அதன்மூலம் வாக்களிப்பவர்கள் எண்ணிக்கையை குறைத்தார். மேலும் சட்டத்தை திருத்தி முழு அதிகாரமிக்கவராக மாற்றிக்கொண்டார். இந்திராவும் பல எதிர்க்கட்சி எம்பிக்களை காவலில் அடைத்துவிட்டார். பின் டிரகௌனிய சட்டம் (Draconian- சிறு குற்றத்திற்கு பெருந்தண்டனை வழங்கும் பழங்கால ஏதெனிய சட்டம்) போல ஒரு திரும்பத்திரும்ப எமெர்ஜன்சி காலத்தில் பிரயோகப்படுத்தினார். ஒரு படி மேலே போய் பாராளுமன்ற நடவடிக்கைகள் பத்திரிக்கைகளில் பிரசுரமாவதை தடை செய்தார். குறிப்பாக இந்த சட்டத்தை முன்மொழிந்தது ராஹுல் காந்தியின் தாத்தா மறைந்த பெரோஸ் காந்தி.

இரு நாட்டு எமெர்ஜென்சி ஆதரவாளர்களின் கூற்றும் ஒரே இயல்புடையதாக இருந்தது. "ஜெர்மானிய புரட்சி தொடங்கி விட்டது", ஹிட்லரின் கொள்கைப்பரப்பு மந்திரி கோயபெல்ஸ் அறிவித்தார். இந்தியாவில் "புரட்சியை போன்றதொரு நிலையை" கடந்து கொண்டிருக்கிறோம் என்றார்கள். முன்கூட்டி தணிக்கை செய்யப்படாமல் ஊடகங்கள் எந்த செய்தியும் வெளியிட முடியாத நிலை. ஊடகங்கள் துஷ்ப்ரயோகம் செய்கின்றன என வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டத்தில் நாம் அக்கால நிலையை அறியலாம். ஒருகட்சி ஜனநாயகமே ஏற்புடையது, ஆனால் இது தானாக வற்புறுத்தல் இல்லாமல் வரவேண்டும் என்று இந்திரா காந்தி குடும்பத்தினரின் செய்தித்தாள் 'தி நேஷனல் ஹெரால்ட்' வக்காலத்து வாங்கியது. நாடு முழுவதும் எல்லா எதிர்க்கட்சி தொண்டர்களும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். எதிர்க்கட்சி தொண்டர்கள் மேல் இந்திய பாதுகாப்பு சட்டப்படி FIR புனைய போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. லட்சக்கணக்கான போலி FIR பதிவானது. உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின்படி ஆயிரக்கணக்கானவர்கள் அடைக்கப்பட்டனர். தடுப்புக்காவலில் அடைப்பதற்கு எந்த காரணமும் தேவையில்லை என சட்டம் திருத்தப்பட்டது. கூடுதலாக, "தடுப்புக்காவல் உத்தரவுகள் பற்றிய வழக்குகள் விசாரிக்கப்படவேண்டியதில்லை" என்று ஒரு ஹேபியஸ் கார்பஸ் வழக்கில் உச்சநீதி மன்றம் மறுபடி வலியுறுத்தியது.

பிரதமர் மீதான தேர்தல்கால குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டியதில்லை என்று 39வது சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. இவர்களுடைய இந்த யோசனைக்கு முன்னுதாரணமாக அமைந்தது, நாஜி தலைவர் ஜோவாசிம் வான் ரிப்பெண்ட்ராப் முன்மொழிந்த ஒரு சட்ட வழிமுறை, அது; "ஹிட்லர் மற்றவர்களைப்போல் சாதாரண பிரஜையில்லை என்பதால் சட்டப்பக்கங்களின் படி அவர் விசாரிக்கபட வேண்டியதில்லை." பபின்னாளில் ஜோவாசிம், ஹிட்லரின் மந்திரிசபையில் வெளியுறவு மந்திரியானார். காங்கிரஸ் தலைவர் தேவ் காந்த் பருவா சொன்னார், "இந்திராதான் இந்தியா. இந்தியாதான் இந்திரா." ஹிட்லரின் நீதிக்கமிஷனர் ஜஸ்டிஸ் Dr.ஹன்ஸ் ஃப்ராங்க் சொன்னது: "இன்று ஜெர்மனியில் ஒரே ஒரு அதிகார மையம்தான். அதுதான் அதிகாரத்தின் வழிகாட்டி" 'ஜெஸ்டபோ' எனும் ரகசிய போலீஸ் இலாகா ஹிட்லரால் உருவாக்கப்பட்டு, மிசா உத்தரவுகள் நீதிமன்ற பார்வைக்கு உட்படாதவையாக்கப்பட்டது.

ஜனநாயகத்தை தடுத்து நிறுத்துவது, தனிமனித உரிமைகளை மீறுவது, அரசியல் எதிரிகளை  காவலில் அடைப்பது, பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது, சுதந்திர நீதி பரிபாலனை இல்லாமல் போவது, ஒருவருக்கே அதிகாரம் குவிநிதிருப்பது போன்றவை ஹிட்லர் அரசின் அம்ஸங்கள். அதன் ஒவ்வொரு அம்ஸங்களும் இந்திராவின் உள்நாட்டு எமெர்ஜன்சியிலும் பிரதிபலித்தது. இருவருக்கும் ஒரே அடிப்படை வித்யாசம்தான். ஹிட்லர் பரம்பரை அரசியலை செய்யவில்லை. ஏனென்றால் அதற்கு அவசியம் இருக்கவில்லை.

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply