தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வுகாண தேசிய ஜனநாயக கூட்டணி முன்னுரிமை தரும் என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். சென்னையில் பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களான விஜயகாந்த், வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருடன் ராஜ்நாத்சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் பா.ஜ.க கூட்டணிகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பாஜக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு விவரமும் தொகுதிகள் விவரமும் அறிவிக்கப்பட்டன.

அப்போது செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறியதாவது: இந்திய அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுக்கு நன்றி. இந்தகூட்டணி அமைய பாடுபட்ட தமிழருவி மணியனுக்கும் மிக்கநன்றி.

தமிழக மீனவர் பிரச்சனை என்பது நாட்டின்பாதுகாப்பு தொடர்பானது. இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும் தமிழகமீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காணவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முன்னுரிமை கொடுக்கும்.

தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வுகாணததற்கு காங்கிரஸ் அரசேகாரணம். அதே போல் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாணவும் தேசிய ஜனநாயக கூட்டணி கவனம்செலுத்தும். தேசிய ஜனநாயகக் கூட்டணியானது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை மதித்து நடந்துகொள்ளும். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

Leave a Reply