தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தோழமை கட்சியினர் வெற்றியைமட்டுமே குறிக்கோளாக கொண்டு ஒற்றுமையாக பாடுபடவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவை ஒருவல்லரசு நாடாகவும், பொருளாதாரத்தில் வளர்ச்சிபெற்ற நாடாகவும், தனி நபர் வருமானத்தில் தன்னிறைவுபெற்ற நாடாகவும் உருவாக்க வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு. இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதில் பெரும்பங்கு வகிப்பது ஊழல் என்பதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.

இந்தியாவில் ஊழலற்ற ஆட்சியை உருவாக்கும் வகையில் தேசிய முற்போக்கு திராவிடகழகத்தின் சார்பில் ஊழல் எதிர்ப்பு மாநாட்டை நடத்தினோம். ஒன்றுபடுவோம், ஊழலை ஒழிப்போம் என்ற புதியபுரட்சி முழக்கத்தின் மூலம் ஊழலுக்கு எதிராக மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி தமிழகத்தில் ஒருமாற்றத்தை ஏற்படுத்திடும் வகையில் மாநாட்டை நடத்தினோம்.

தமிழகத்தில் ஊழலுக்கு பெயர் போன அதிமுக., திமுக., காங்கிரஸிற்கு மாற்றாக புதியதொரு அணியை உருவாக்கிடும் முயற்சியின் விளைவு தான் தேசிய ஜனநாயக கூட்டணியாகும்.

இந்த கூட்டணியில் இந்திய அளவில் பல்வேறு கட்சிகள் அங்கம்வகித்தாலும், தமிழ்நாட்டில் தேசிய முற்போக்கு திராவிடகழகம், பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல இயக்கங்கள் இந்த கூட்டணியில் இணைந்துள்ளன. பல இயக்கங்கள் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளன.

நாட்டில் ஏழைமக்களின் வறுமைக்கும், அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் லஞ்சமும், ஊழலும் தான் பெரிதும் காரணமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கான திட்டங்களை முறையாக தீட்டி, லஞ்சம், ஊழல் இல்லாத வகையில் நிறைவேற்றி இருந்தால் இந்தியா எல்லா துறைகளிலும் முன்னேற்றம் கண்டிருக்கும் . ஆனால் இன்றைய நிலையோ முற்றிலும் நேர்மாறாக உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைந்திடவேண்டும். மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் பா.ஜ.க பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி தலைமையில் இந்திய அரசு அமையவேண்டும். அது இந்தியாவை கட்டாயம் வளர்ச்சிப் பாதையில்கொண்டு செல்லும் என்கின்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எனவே, தேசிய முற்போக்கு திராவிட கழகம், பாஜக உடன்பாடுகொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

இக்கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மட்டுமல்ல, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் கூட்டணியின் சார்பில் போட்டியிடுகின்ற தேமுதிக மற்றும் தோழமைக் கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்கும் தேமுதிகவின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கடுமையாக பாடுபட வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற வேண்டும். இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திரமோடி வரவேண்டும் என்கின்ற குறிக்கோளோடு, சுய விருப்பு, வெறுப்பு இன்றி இரவு, பகலென பாராமல் தேமுதிகவினர் அனைவரும் சிறப்பாக தேர்தல்பணியாற்றி 40 தொகுதிகளிலும் கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்யவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், தே.ஜ.கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்ற தோழமை கட்சியினர் அனைவரும் எந்த நோக்கத்திற்காக நாம் ஒன்றிணைந்து இருக்கிறோமோ, அதை நிறைவேற்றும் வகையில் வெற்றியை மட்டுமே நமது குறிக்கோளாக கொண்டு நாம் அனைவரும் ஒற்றுமையாக பாடுபடவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply