தமிழக அரசியல் களத்தில் ஒரு புதியகூட்டணி காட்சி அரங்கேறி உள்ளது. முதல் முறையாக தேசிய கட்சியான பா.ஜ.க பிரதான கட்சிகளான அதிமுக., திமுக., இல்லாமல் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளை இணைத்து ஒரு மாபெரும் மாற்று அணியை உருவாக்கி உள்ளது.

இந்நிலையில் இது குறித்து பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது; தமிழகத்தை பொறுத்த வரை பா.ஜனதா ஏதாவது ஒரு கட்சியுடன் சேர்ந்து சாதாரணமாக பத்தோடு பதினொன்றாக இருந்து வந்த நிலைதான் இருந்தது.

ஆனால் நாடு முழுவதும் உருவாகி இருக்கும் மோடி அலையால் தமிழகத்திலும் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க முடியுமா? என்று ஆலோசியுங்கள் என்று கட்சி மேலிடம் எங்களுக்கு கட்டளையிட்டது. அப்போது எங்களுடன் இந்திய ஜனநாயக கட்சி மட்டும்தான் இருந்தது.

கூட்டணிக்கு அச்சாரம் போடும் முயற்சியில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் ஈடுபட்டார். பத்திரிகை மற்றும் கட்சி தலைவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு அவர் ஆற்றிய பணிகள் கணக்கிட முடியாதது. அவருக்குத் தான் முதலில் எங்கள் பாராட்டுக்கள்.

கடந்த டிசம்பர் மாதம் கூட்டணி பேச்சுக்களை தொடங்கினோம். முதலில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்தோம். அடுத்தடுத்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ம.க. தலைவர்கள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் ஆகியோரை சந்தித்தோம்.

இப்போதைய அரசியல் சூழ்நிலையில் மோடி பிரதமராக வரவேண்டும். பா.ஜனதாவோடு கூட்டணி அமைக்க வேண்டும். இதுவே வெற்றிக் கூட்டணியாக அமையும் என்ற உணர்வு எல்லா தலைவர்களிடமும் இருந்ததை உணர்ந்தோம். அது எங்கள் கூட்டணி முயற்சிக்கு உற்சாகத்தை அளித்தது.

ஜனவரி–1 புத்தாண்டு தினத்தில் மோடி பிரதமர் ஆக வேண்டும். ம.தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்கும் என்ற அறிவிப்பை முதலில் வைகோ வெளியிட்டார்.

அன்றே விஜயகாந்தையும் சந்தித்தோம். அப்போது அவர், உங்கள் கூட்டணிக்கு வருகிறேன். ஆனால் கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறதே என்றார்.

அதை தொடர்ந்து பா.ம.க.வுடன் பேசினோம். கூடுதல் தொகுதி வேண்டும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் வேண்டும் என்பது எல்லா கட்சிகளும் எதிர்பார்ப்பதுதான்.

அதே மனநிலையில்தான் எல்லா கட்சிகளும் இருந்தன. அதனால் தொகுதி பங்கீட்டில் சிக்கல்கள் ஏற்பட்டது உண்மைதான்.

ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. நாட்டு மக்கள் விரும்பும் ஒரே தலைவர் மோடி. விழுப்புரத்தில் விஜயகாந்தும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார். எனவே எந்த கட்சியும் இந்த கூட்டணியை விட்டு போகாது என்ற நம்பிக்கை உறுதியானது.

இந்த கட்சிகளை ஒருங்கிணைக்க பொறுமைதான் அவசியம் என்பதை உணர்ந்தேன். 1998 முதல் 4 தேர்தல்களில் மற்ற கட்சிகளிடம் சென்று ‘சீட்’ கேட்டோம். அந்த அனுபவம் வேறு. இப்போதைய அனுபவம் முற்றிலும் மாறுபட்ட புதிய அனுபவமாக இருந்தது. இப்போது நாங்கள் பகிர்ந்து கொடுக்கும் நிலையில் இருந்தோம். இது சாதாரண விசயமல்ல. மிகவும் கடினமாக இருந்ததை அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்.

ஒவ்வொரு நாளும் பேசும்போது ஒவ்வொரு விதமான சூழ்நிலையை சந்திப்போம். நாங்கள் ஒரு கோணத்தில் பேசும்போது இன்னொரு கோணத்தில் புது பிரச்சினை வரும். அப்போதெல்லாம் விரக்தி வருவது இயல்புதான்.

ஆனால் தற்போதைய சூழ்நிலை, கட்சிகளின் சூழல், மனநிலை, எதிர்பார்ப்பு, இலக்குகள் எல்லாமே தெரியும். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அந்த மாற்றத்தை கொடுக்க கட்சிகளும் தயாராக இருப்பதை உணர்ந்தோம். எனவே மோடிக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகள் சிதறிவிட கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டோம்.

பா.ஜனதாவை பொறுத்த வரை நானும் ஒரு சாதாரண தொண்டன்தான். வெற்றி வாய்ப்புள்ள சில தொகுதிகள் கிடைக்கவில்லையே என்ற எண்ணம் எனக்கும் உண்டு.

ஒரு கூட்டுக் குடும்பத்தில் குழந்தைகளுக்கு உணவு பரிமாறும் தாய் முதலில் தனக்கு எடுத்து வைத்து விட்டு குழந்தைக்கு பரிமாற மாட்டாள். கிட்டத்தட்ட அதே நிலைதான் எங்களுக்கும். எங்களுக்கும் தேவை. அதே நேரத்தில் எல்லோரையும் திருப்தி படுத்த வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு. அந்த பொறுப்பை எல்லோரது ஒத்துழைப்புடனும் வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறோம்.

எல்லா தொகுதிகளிலும் மோடி நிற்பதாகவே நாங்கள் கருதுகிறோம். எங்கள் மீதான அவதூறுகளை மக்கள் தவிடு பொடியாக்குவார்கள்.

தமிழகத்தை பொறுத்த வரை பா.ஜனதா வேகமாக வளர்ந்து வரும் கட்சி. எங்கள் தொலை நோக்கு பார்வை கட்சியை இன்னும் வலுப்படுத்துவது.

இப்போதைக்கு பா.ஜனதா ஜெயிப்பது. அதற்கு ஆதரவான கூட்டணி கட்சிகள் ஜெயிப்பது என்பது எங்கள் முதல் வேலை.

மோடி வெற்றி பெற்ற மறு நிமிடமே எங்கள் தொலைநோக்கு செயல் திட்டம் தொடங்கும். அடுத்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் பா.ஜனதா மிகப்பெரிய சக்தியாக மாறும் என்று அவர் கூறினார்.

Leave a Reply