நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் மும்முனை போட்டி தான் இருக்கும் என பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது; தமிழகத்தில் பா.ஜ.க தலைமையில் உருவாகியுள்ள தேசியஜனநாயக கூட்டணி இன்று பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. தொகுதிக்கு ஒன்றுவீதம் 39 ஒருங்கிணைப்பு குழு அமைக்கவுள்ளோம். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் இணைந்தும், தனித் தனியாகவும் பிரச்சாரம் மேற் கொள்ளப்படும். தமிழகத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம்செய்ய மூத்த தலைவர் எல்கே.அத்வானி, பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வரவுள்ளனர். அவர்கள் பிரச்சாரம் செய்யும் இடம், தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் நிச்சயம் மும்முனை போட்டி தான் இருக்கும். தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றிபெறும். வாக்கு வித்தியாசத்தை பற்றிக் கவலையில்லை. மத்தியில் காங்கிரஸ் அரசை வீழ்த்துவது தான் எங்கள் முக்கியநோக்கம். இந்த தேர்தலை பொருத்த வரை தமிழகத்தில் காங்கிரஸ் காணாமல் போய் விடும். புதுச்சேரி கூட்டணிக்கு நான் பொறுப்பில்லை. அக்கூட்டணி குறித்து புதுச்சேரியும் டெல்லியும் தான் முடிவெடுக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரை மீனவர்கள் பாதுகாப்பு, இலங்கைத் தமிழர் நலன், வளர்ச்சித்திட்டங்கள் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்துவோம். மீனவர்கள் பிரச்சினையில் தமிழக அரசு மீது பழிபோட்டு மத்திய அரசு தப்பிக்கப்பார்க்கிறது என்றார்.

Leave a Reply