பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில், தேஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி(கொமதேக) மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையடுத்து, கோவை ரோட்டில் கொமதேக தலைமை தேர்தல் அலுவலகம் திறப்புவிழா நேற்று நடைபெற்றது.

இதில், பொள்ளாச்சிதொகுதி கொமதேக வேட்பாளர் ஈஸ்வரன் தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்து பேசியதாவது: 'பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தியாவில் மாற்றத்தைகாண மக்கள் விரும்புகின்றனர். ஆகவே, மக்கள் நமக்கு வெற்றியை தரதயாராக உள்ளனர் எண்பது உறுதியாகியுள்ளது. பொள்ளாச்சி தொகுதியில் கொமதேக வேட்பாளராக இருக்கும் என்னை, மக்கள் வெற்றிபெற செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழக மக்களின் எதிர் காலம் சிறப்பாக இருக்க மத்தியில் பிரதமராக நரேந்திரமோடி வரவேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும். நரேந்திரமோடி ஆட்சிசெய்யும் குஜராத் மாநிலத்தில் மின்வெட்டு கிடையாது. அதுபோல், தமிழகமும் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்ற நாம் பாடுபடுவோம். தாமரைசின்னத்தை மக்கள் மனதில் ஆழமாக பதியசெய்ய, நம் கூட்டணி கட்சியை சேர்ந்த அனைவரும் அந்தந்த பகுதியில் வீடு, வீடாக பிரசாரம் மேற்கொண்டு வெற்றிக்காக பாடுபடவேண்டும்' என்றார்.

தலைமை தேர்தல் அலுவலக திறப்பு விழாவின் போது, தேமுதிக மாவட்ட செயலாளர் பி.கே.தினகரன் எம்எல்ஏ., பாஜ.,மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், மதிமுக மாவட்ட செயலாளர் குகன்மில்செந்தில், கொமு« தக மாவட்ட செயலாளர் நித்தியானந்தம் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply