ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த்கேஜரிவால் தாம்தொட்ட எந்த விஷயத்தையும் பாதியிலேயே விட்டு விடுகிறார் , கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஓட்டம் பிடிக்கிறார் என்று நிர்மலா சீதாராமன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேஜரிவால் கபட நாடகம் ஆடுவதிலும், தன் வசதிக்கேற்ப அரசியல்செய்வதிலும் ஈடுபட்டு வருகிறார். இது போன்ற போக்கு, நாட்டிற்குக் கவலை தரக்கூடியது ஆதாகும். தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை கேஜரிவால் ஆதரிப்பது அவரது மனப் பான்மையை காட்டுகிறது. இது போன்றவரை தேர்வுசெய்வது நாட்டின் நலனுக்கு உகந்ததா?

கேஜரிவால் எதையுமே பாதியிலேயே விட்டுவிடுவார். அவரது இந்திய வருவாய்ச் சேவை (ஐ.ஆர்.எஸ்) பணி பாதியிலேயே நின்றுவிட்டது. ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பையும், ஹசாரேவையும், தில்லிமக்களையும் அவர் நடுவழியிலேயே கைகழுவினார். இப்போது நாடுமுழுவதும் ஆம் ஆத்மி வேட்பாளர்களையும் அவர் கைவிட்டுவருகிறார்.

வெளிநாட்டை சேர்ந்த ஃபோர்டு அறக்கட்டளையிடம் இருந்து நிதிபெற்றது தொடர்பாக அவர் இதுவரை திருப்திகரமான பதிலை கூறவில்லை. எப்போது நிதிபெறப்பட்டது என்பதற்கும் அது எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதற்கும் கேஜரிவால் பதில்கூறட்டும்.

ஆம் ஆத்மி கட்சியின் பார்வையில் வாராணசி மற்றும் அமேதி ஆகிய இருதொகுதிகள்தான் முக்கியமானவை. நாடுமுழுவதும் ஆம் ஆத்மிகட்சி சார்பில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் குறித்த அவர்களது நிலை என்ன? அவற்றுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று கேஜரிவால் உணர்த்திவிட்டார் என்றார் நிர்மலா சீதாராமன்.

Leave a Reply