மத்திய விவசாய அமைச்சர், சரத்பவாருக்கு, கிரிக்கெட்டை பற்றி மட்டும் பேசுவதற்கு நேரம் இருக்கிறது. ஆனால், அவரின் சொந்த மாநிலத்தில், கடன்தொல்லையால், விவசாயிகள் செத்து மடிவதை பற்றி பேசுவதற்கு நேரம் இல்லை, என்று பாஜக., பிரதமர் வேட்பாளர், நரேந்திரமோடி பேசியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், அமராவதியில் நடந்த, பா.ஜ., தேர்தல்பிரசார கூட்டத்தில், மோடி பேசியதாவது:மகாராஷ்டிர மாநிலத்தில், கடன்தொல்லை காரணமாக, ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் நடுத் தெருவில் நிற்கின்றன. ஆனால், இந்த மாநிலத்தை சேர்ந்த மத்தியவிவசாய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவாருக்கு, இதைப்பற்றி மட்டும் பேசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை.இந்தபிரச்னை குறித்து, அவர், வாய் திறப்பது இல்லை. ஆனால், கிரிக்கெட்டை பற்றி மட்டும், வாய்மூடாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். இதற்கு மட்டும் அவருக்கு எப்படித்தான் நேரம் கிடைக்கிறதோ தெரியவில்லை.மத்தியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிக்கிறது. சுதந்திர போராட்டத்தின் போது, ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷம் எழுப்பப்பட்டது. இப்போது, ‘நாட்டைவிட்டு, காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும்’ என்ற, கோஷம் எழுப்ப வேண்டியுள்ளது.

விவசாயிகளும் ஏழைத் தொழிலாளர்களும் படும்சிரமங்கள், காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியவில்லை. மத்திய, காங்கிரஸ் ஆட்சியின் நாட்கள் எண்ணப் படுகின்றன. வரும், மே மாதத்துக்குபின், காங்கிரஸ் கட்சியினர் எங்கு போக போகின்றனர் என, யாருக்கும் தெரியாது.நரேந்திரமோடி, ஆட்சிக்குவந்து விடக்கூடாது என்பதில், காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் உறுதியாக உள்ளன. மற்ற பிரச்னைகளில் வேறுபட்ட கருத்துகளை தெரிவிக்கும் கட்சிகள், என்னை எதிர்ப்பதில் மட்டும் ஒன்று சேருகின்றன.என்று மோடி பேசினார்.

Leave a Reply