பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றால், குஜராத்தை போன்று தமிழகத்தின் வளர்ச்சியிலும் புதியமாற்றங்களை கொண்டு வருவோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில், தே.மு.தி.க வேட்பாளர் உமா சங்கரை ஆதரித்து பிரேமலதா

விஜய காந்த் பேசியது: தமிழகத்தில் அதிமுகவும், திமுகவும் மாறிமாறி ஆட்சிசெய்தும் மாநிலம், எந்த முன்னேற்றமும் அடையவில்லை. தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு யாரும் தொடர்ந்து ஆட்சிக்கு வரமுடியவில்லை. ஆனால், குஜராத்தில் நரேந்திரமோடி தொடர்ந்து மூன்று முறை ஆட்சிக்கு வந்துள்ளார். அதனால் அம்மாநிலம் சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

குஜராத்தைப் போன்று தமிழகத்திலும் வளர்ச்சி பணிகளை செயல்படுத்த வேண்டுமானால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும். இந்த கூட்டணி வெற்றிபெற்றால், புதிய மாற்றங்களை கொண்டுவருவோம். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும், தொழிற்சாலைகளை கொண்டுவரவும் முயற்சி செய்வோம். மாநகராட்சிக்கு இணையான நகராட்சி விழுப்புரம். ஆனால் இங்கு மக்கள் பிரதிநிதிகளாக அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் பலர் வெற்றி பெற்றிருந்தாலும், நகர வளர்ச்சிக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கு செயல் படுத்தப்படும் புதைச்சாக்கடை திட்டம் கிடப்பில் உள்ளது. கரும்புக்கு பணம் பட்டுவாடா செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் கடன்வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Leave a Reply