குஜராத் முதல்வரும், பா.ஜ.க பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி, இந்தியாவின் பிரதமரானால் அவருக்கு விசாவழங்க விதிக்கப்பட்டுள்ள தடை தானாகவே நீங்கி விடும் என்று அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுக்குழு அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மூண்ட கலவரத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று குற்றம்சாட்டி, மோடிக்கு விசாவழங்க அமெரிக்க அரசு தடைவிதித்தது.

இந்நிலையில், விரைவில் நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று நரேந்திர மோடி பிரதமரானால் அவருக்கு விசா வழங்கப்படுமா? என்பது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோபிட்ஸ் (குடியரசு கட்சி) மற்றும் கேத் எல்லிசன் (ஜனநாயக கட்சி) ஆகியோர் அந்நாட்டு அரசிடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்தமாதம் 18ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. “விசாகொள்கை; நரேந்திர மோடி மீதானவழக்கு’ என்ற தலைப்பில் 7 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கை, பொதுமக்களின் பார்வைக்கு திங்கள் கிழமை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், “இந்தியாவின் பிரதமர்பதவிக்கு பா.ஜ.க சார்பில் நரேந்திரமோடி போட்டியிடுகிறார். ஒரு வேளை நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமராக தேர்வுசெய்யப்பட்டால், அவர் தூதரக காப்புரிமை சலுகையை பெறுவார். அப்போது அவருக்கு விசாவழங்க அமெரிக்க அரசு விதித்துள்ள தடை தானாக நீங்கி விடும்.

ஒருநாட்டின் தலைவர் என்ற முறையில், ஏ-1 விசாபெறும் உரிமையை நரேந்திரமோடி பெற்று விடுவார்’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனது அறிக்கையில், குஜராத்கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்று இந்தியாவில் உள்ள நீதி மன்றங்களும், விசாரணை அமைப்புகளும் தெரிவித்திருப்பதையும் அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply