மதவாத அரசியலை சோனியாகாந்தி கையில் எடுத்துள்ளார். தேர்தல் நடத்தை விதி முறை மீறலில் ஈடுபட்ட அவர்மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

காஜியா பாத், குரு சேத்திரா, குர்கான் ஆகிய பகுதிகளில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: “தோல்வி அடைந்து விடுவோம் என்ற உணர்வு காங்கிரஸ் கட்சியினருக்கு வந்து விட்டது. அதனால், மதச் சார்பின்மை என்ற கோஷத்திலிருந்து, மதவாதம் என்ற நிலைக்கு அந்த கட்சி மாறிவிட்டது.

சோனியா காந்தி, முஸ்லிம்வாக்குகள் சிதறிவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று தில்லி ஜும்மா மசூதி ஷாகி இமாம் சயீத் அகமது புகாரியிடம் கூறியது, தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு எதிரானது. மதத்தின் அடிப்படையில் வாக்குசேகரிக்க கூடாது என்ற விதிமுறை உள்ளது.

ஷாகி இமாமிடம் சோனியா கூறியவிஷயங்கள் தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியாகி 24 மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்னமும் இந்த விவகாரத்தில் தானாகவே முன் வந்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?

இந்நாட்டை தவறாக வழிநடத்தியதுடன், தேசத்தை பிரித்தாளும் நடவடிக்கையிலும் சோனியா ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ்கட்சி, மதச் சார்பின்மை என்ற பெயரில் மதத்திற்குத்தான் முக்கியத்துவம் தருகிறது. நாங்கள் (பாஜக) இந்திய நலனுக்கே முக்கியத்துவம் தருகிறோம்.

எங்கள் கட்சியைப் பொறுத்தவரை மதச்சார்பின்மை என்பது அனைவரையும் ஒன்றுபடுத்துவது, வளர்ச்சியில் பங்கேற்க வைப்பது ஆகியவை தான். காங்கிரஸை பொறுத்த வரை மக்களை பிரித்தாளு வதைத்தான் மதச்சார்பின்மை எனக் கருதுகிறது. தேர்தலின் போது மட்டுமே மதச் சார்பின்மை கோஷத்தை காங்கிரஸ் முன்வைக்கிறது. அனைத்து சமூகத்தினரும் எங்கள் சமூகத்தினரே என்ற கொள்கை உடையவர்கள் நாங்கள். மதச் சார்பின்மையை வைத்து காங்கிரஸ் வாக்குவங்கி அரசியலை நடத்துகிறது. வளர்ச்சி என்பதே எங்களின் தேசிய செயல் திட்டம்.

தனது தவறான செயல்பாடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசு, மத்தியில் அமைந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் கருதுகிறது. அவர்களின் தவறுகளையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டும் என்றால் வலிமையான அரசு அமையவேண்டும். எங்களுக்கு 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை தாருங்கள்.

நாட்டின் வளத்தைக் காக்க அனைவரும் காவலாளிகளாகச் செயல்படவேண்டும் என்று இளவரசர் (காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி) கூறியுள்ளார். மக்களின் நிலத்தை பாதுகாக்கும் பணியில், அவரின் சகோதரி பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவும் ஈடுபடுவாரா? என்று கேள்வி எழுப்பினார்.

ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற நில பேர வர்த்தகத்தில் ராபர்ட் வதேரா முறைகேடு செய்துள்ளார் என சில மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. அதை ராபர்ட் மறுத்திருந்தார். இந்த விவகாரத்தை குறிப்பிட்டே மோடி இவ்வாறு கூறினார்.

Leave a Reply