வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பது போன்ற முறைகேடான செயல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் நள்ளிரவுபிரச்சாரம் தொடர்பான உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக கூட்டணியைச் சேர்ந்த தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க வேட்பாளர் டாக்டர் அன்பு மணி ராமதாஸ் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலை பா.ஜ.க வன்மையாக கண்டிக்கிறது. இது போன்ற வன்முறையை ஒரு போதும் சகித்துக்கொள்ள முடியாது.

தருமபுரி பகுதியில் ஏற்கனவே சாதிக் கலவரம் நடந்துள்ளது. அங்கு 144 தடை உத்தரவு நீண்டகாலம் அமலில் இருந்தது. இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், சமூகவிரோத சக்திகளின் செயலையும் முற்றிலுமாகக் கட்டுப்படுத்த வேண்டும். இது போல முன்னாள் மத்திய மந்திரி ஏகே.மூர்த்தியும் தாக்கப்பட்டிருக்கிறார். இது போன்ற சம்பவங்களால் அச்சம் ஏற்பட்டு வாக்காளர்கள் ஓட்டுப்போட முடியாத நிலை ஏற்படும். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நள்ளிரவிலும் பிரசாரம் செய்யலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.இது வாக்காளர்களுக்கு பணம்கொடுப்பது, பரிசுப் பொருட்கள் கொடுப்பதுபோன்ற முறைகேடான செயல்களுக்கு வழிவகுக்கும். எனவே, இந்த உத்தரவை தேர்தல் ஆணையம் மறு பரிசீலனை செய்யவேண்டும்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தமிழகத்தில் பிரசாரம்செய்ய வரவுள்ளார். அவருடன் பிரசாரத்துக்கு வரவேண்டிய தலைவர்கள் பட்டியலையும் கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளோம். நரேந்திர மோடி வரும் தேதி உறுதியானதும், எந்த இடத்தில் பிரசாரம் என்பதை அறிவிப்போம்.

நாங்கள் கருத்து கணிப்பை மட்டும் நம்பி, நரேந்திரமோடி பிரதமராவார் என்று கூறவில்லை. பிரசாரத்தில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பு, பாஜக தலைவர்களின் பிரச்சாரத்துக்கு வரும் மக்கள் கூட்டம் ஆகிய வற்றையும் கருத்தில் கொண்டே மோடி பிரதமர் ஆவது உறுதி என்று கூறுகிறோம் என்றார்

Tags:

Leave a Reply