கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கிள்ளியூர் பகுதியில் இன்று திறந்தவாகனத்தில் சென்று வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது

பணம்கொடுத்து உங்களை விலைக்குவாங்க வருவார்கள். ஆனால் நீங்கள் விலை போய்விடக் கூடாது. என்னிடம் பணமும் இல்லை. நான் உங்களை விலைக்குவாங்க விரும்பவும் இல்லை. அதற்குப்பதிலாக என்னை நீங்கள் விலைக்கு வாங்குங்கள். உங்களின் ஓட்டுகளை எனக்குபோட்டு, என்னை நீங்கள் விலைக்கு வாங்குங்கள். நான் உங்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன். ஏற்கெனவே குமரிமாவட்ட மக்களுக்கு ஏராளமான நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். ஜாதி, மதம் பார்க்காமல் நான் உங்களுக்கு உழைப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்தியானாலும் சரி, மீனவ சகோதரர்களின் கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் கட்டியதாக இருந்தாலும் சரி, எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் நான் சேவைசெய்து வருகிறேன். அது தொடரவேண்டும். முழு நேரமும் நான் உங்களுக்காக உழைக்க வேண்டும். இன்னும் சிறப்பாக நான் உங்களுக்கு உழைக்க எனக்கு நீங்கள் வாய்ப்பு தரவேண்டும்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தங்க நாற்கரசாலை கொண்டு வரப்பட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவருக்கும் பயன்படும் அற்புதமான திட்டம் அது. அதன் ஒருபகுதியாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலைக்கும் திட்டம் போடப்பட்டது. கிராமங்களுக்கு வெளியே, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அந்த திட்டத்தை செயல்படுத்த நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாஜ்பாய் அரசுக்கு அடுத்துவந்த காங்கிரஸ் அரசானது அந்ததிட்டத்தை அப்படியே நிறைவேற்றாமல், அதனை மாற்றி நாகர்கோவில் – கன்னியா குமரி சாலையை கிராமங்களின் நடுவே செல்லுமாறு அமைத்துள்ளது. இதனால் ஏராளமான மக்கள் வீடுகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோயில்களை இடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. கிறிஸ்தவ தேவாலயங்களை, மசூதிகளை இடிக்கும்நிலை. இதெல்லாம் தேவைதானா? இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தானே. மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு எப்படி மக்கள்நல அரசாக இருக்கமுடியும்.

எனவேதான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம்… மத்தியில் உள்ள மக்கள்விரோத காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும். மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சாதனை நாயகன் நரேந்திரமோடி பிரதமராக வேண்டும். அதற்கு நீங்கள் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சி அமைந்த உடன், மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுத்த உள்ள நாகர்கோவில் – திருவனந்தபுரம் நாற்கரசாலை திட்டம் மாற்றி அமைக்கப்படும். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், கிராம பகுதிகளுக்கு வெளியே உள்ள பகுதிகள்வழியாக இந்த சாலைத்திட்டம் நிறைவேற்ற படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனனை வெற்றிபெற செய்தால், நான் கன்னியா குமரி மாவட்டத்தில் விமான தளம் கொண்டுவருவேன். குமரிக்கான ரயில் பாதையை இரட்டை ரயில்பாதையாக மாற்றுவேன். ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனையை மல்டி ஸ்பெசியாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த பாடுபடுவேன். குளச்சலில் வர்தகதுறைமுகம் அமைக்க முயற்சி மேற்கொள்வேன். இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தை இந்தியாவில் உள்ள 572 மாவட்டங்களில் முதன்மை மாவட்டமாக மாற்றுவேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

Leave a Reply