நாட்டின் பாதுகாப்பு பலவீனம் அடைந்துள்ளது குறித்து நாட்டுமக்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏகே.அந்தோணி விளக்கம் தர வேண்டும். பலவீனமான அரசு நமக்குவேண்டாம். வலுவான அரசு அமைய வேண்டுமெனில், நீங்கள் 300க்கும் மேற்பட்ட பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யுங்கள் என்று பா.ஜ.க.,வின் பிரதமர் பதவி வேட்பாளரான நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட மோடி கூறியதாவது:

பாதுகாப்புப் படைக்குத் தேவையான சிறந்தகருவிகள் கொள்முதல் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் ராணுவத்தால் இந்தியவீரர்களின் தலை துண்டிக்கப்பட்டது. ஆனால், அந்தச்செயலை பாகிஸ்தான் ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் புரிந்ததாக நாடாளுமன்றத்தில் அந்தோணி தெரிவித்தார். இது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு சாதகமாகவே அமைந்தது. இதற்காக அந்தோணிக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் புகழாரம்சூட்டின.

அந்தோணியின் இந்த அறிவிப்பினால், இந்தியவீரர்கள் அதிருப்தி அடைந்தனர். கேரள கடற்பகுதியில் இத்தாலிய கடற் படை வீரர்களால் இந்திய மீனவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாலிய கடற்படைவீரர்கள் எந்த சிறையில் அடைக்கப்பட்டனர் என்று அந்தோணியும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் தெரிவிக்கவேண்டும்.

பலவீனமான அரசு நமக்குவேண்டாம். வலுவான அரசு அமைய வேண்டுமெனில், நீங்கள் 300க்கும் மேற்பட்ட பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யுங்கள்.

இத்தேர்தல் முடிவில், காங்கிரஸ் நூறு தொகுதிகளில்கூட வெற்றிபெறாது. நாட்டில் 10 மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கேரளம் உள்பட காங்கிரஸ் ஆட்சிசெய்யும் 6 மாநிலங்களும் அடங்கும். அப்பட்டியலில் பாஜக ஆளும் மாநிலங்கள் எதுவும் இல்லை , சுற்றுலாவுக்காக உலகம் முழுவதும் மக்களை கவர்ந்திழுக்கும் கேரளா, தற்போது தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது.

சுற்றுலாத் துறையையும், ஆயுர் வேத மருத்துவ துறையையும் முறையாக பயன் படுத்த கேரள அரசு தவறிவிட்டது. மாநிலத்தில் உரிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படாததால், இளைஞர்கள் வேலைதேடி வேறுநாடுகளுக்குச் செல்கின்றனர். மாநிலத்தின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் நிதி முக்கியப்பங்கு வகிக்கிறது.

செயற்கைக்கோள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தை பயன் படுத்தி மீனவ சமுதாயத்துக்கு உதவும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காசர்கோடு பகுதியில் என்டோசல் ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தால் பாதிக்கப்பட்ட 50,000க்கும் மேற்பட்ட விவசாயிகள், இளம்வயதிலேயே முதுமை அடைந்து விட்டனர். மத்திய, மாநில அரசுகளின் மெத்தனத்தால் அவர்களுக்கு தற்போது வரை நிவாரணம் அளிக்கப்படவில்லை என்று மோடி தெரிவித்தார்.

Leave a Reply