மிகவும் இளம்வயதில் நரேந்திர மோடிக்கு திருமணம் நடந்ததாகவும், நாட்டிற்காக உழைக்க மனைவியை துறந்ததாகவும் அவரது மூத்தசகோதரர் சோமாபாய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், போதுமான படிப்பறிவு இல்லாத தனது ஏழைபெற்றோர், 18

வயதிற்கு முன்பாகவே மோடிக்கு ஜஷோதா பென் என்ற பெண்ணை திருமணம் செய்துவைத்ததாக கூறியுள்ளார். எனினும், திருமணம் ஆன உடனேயே நரேந்திரமோடி வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், அதன் பிறகு அவர் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளாமலேயே வாழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குடும்ப வாழ்க்கையை விட தேசத்திற்காக வாழவேண்டும் என்பதிலேயே நரேந்திர மோடி தீவிரமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள சோமாபாய், தேசசேவையே உண்மையான மதம் என்பதில் மோடி உறுதியாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியை திருமணம்செய்த ஜஷோதா பென், தனது தந்தைவீட்டில் வசித்து வருவதாகவும், கல்விப் பணியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் சோமாபாய் கூறியுள்ளார். குஜராத்தின் வதோதாரா தொகுதியில் வேட்புமனு தாக்கல்செய்த பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, அந்தமனுவில் தான் திருமணமானவர் என்பதை முதன்முறையாக வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply