காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் தான் உலக சாதனை என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

சிவகங்கை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் எச் ராஜாவை ஆதரித்து பொன். ராதாகிருஷ்ணன் சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம், தாய மங்கலத்தில் வியாழக் கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:

இந்தியாவில் சாதனையைப் படைத்த ஆட்சியைசெய்தவர் வாஜ்பாய். குடிசையில் இருப்பவரை மேலே கொண்டுவர சிந்தித்தவர். அவரது ஆட்சியில் தான் தங்க நாற்கர சாலைகள் மூலம் நாடுமுழுவதும் தரமான சாலைப் போக்குவரத்து அமைக்கப்பட்டது. அந்த அமைச்சரவையில் இருந்த நான், ஆண்டுக்கு லட்சம்கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தரமான பணிகள்செய்தோம். யாரிடமும் ஒருபைசா வாங்கியதாக யாரும் ஊழல் புகார் கூற முடியாது. கண்ணியமான, நேர்மையான ஆட்சி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது.

ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஊழல், நிலக்கரி துறையில் ஊழல், ராணுவத்தினருக்கு கட்டப்பட்ட வீடுகளில் கொள்ளையடித்தவர்கள் என காங்கிரஸ் ஆட்சியின் தவறுகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஏழை வீட்டுப்பெண்கள் தங்கத்தை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது.

கடந்த 2009-ல் இலங்கையில் நடைபெற்ற போரில், இலங்கைக்கு துணை நின்றகாங்கிரஸ் அரசால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை தமிழர்களுக்கு துரோகம்செய்தது காங்கிரஸ் அரசு. முல்லைப் பெரியாறு அணை, காவிரி பிரச்சினை, இலங்கை பிரச்சினை, மீனவப்பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தத்தேர்தல் காங்கிரஸ் கட்சியை தண்டிக்க வேண்டிய தேர்தல். இது காங்கிரஸின் தண்டனைக்காலம், தண்டித்தே ஆகவேண்டும். பாஜக கட்சியை வெற்றிபெற செய்வதன் மூலம்தான் காங்கிரஸை தண்டிக்க முடியும் என்றார்.

Tags:

Leave a Reply