மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான ரிமோட்கன்ட்ரோல் ஆட்சியே நடக்கிறது, நல்லாட்சியும், வளர்ச்சியும் எனது இரண்டு முக்கிய நோக்கங்கள் என்று பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவி்த்துள்ளார். கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதியில் இன்று (ஏப்ரல் 13 ஞாயிற்றுக்கிழமை) பேசிய மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிக்மகளூர் தொகுதியில் அவர் பேசியதாவது. முன்னாள் பிரதமர் இந்திராவை விட நாங்கள் 10 மடங்கு மேலான சிறப்பான ஆட்சியை வழங்குவோம்; ஒரு சிங்கம் ஆட்சிக்கு பிறகு காங்கிரசை 100 குரங்குகள் ஆக்கிரமித்து விட்டன; மோசமாக ஆட்சி நடத்திய போதும் சிக்மகளூர் மக்கள் இந்திராவிற்கு ஆதரவு தந்தீர்கள்; ஆனால் அவரை விட சிறப்பான ஆட்சியை தருவோம் என நான் வாக்குறுதி அளிக்கிறேன்;

எனக்கும் உங்களுக்கும் சிறப்பான தொடர்பு உள்ளது; நான் டீ வியாபாரி; தற்போது காபி உற்பத்தி செய்யும் உங்களை தேடி வந்துள்ளேன்; நல்லாட்சியும், வளர்ச்சியும் எனது இரண்டு முக்கிய நோக்கங்கள்; கடந்த 10 ஆண்டுகளாக சோனியாவின் ஆட்சியில் ஏதாவது வளர்ச்சி ஏற்பட்டதா? 10 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம்; இதில் சோனியாவும், ராகுலும் ஆட்சி நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஏதும் செய்யவில்லை; ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ரிமோட் கன்ட்ரோல் ஆட்சியாக மட்டுமே இருந்துள்ளது;

நான் பிரதமரானால் அரசியலை விட்டே சென்று விடுவதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்; அவ்வாறு அவர் கர்நாடகாவை விட்டு வெளியேறும் பட்சத்தில் அவர் குஜராத்திற்கு வரலாம் என நான் அவருக்கு அழைப்பு விடுக்கிறேன்; அவரது தனது ஓய்வு காலத்தை பண்ணையிலோ, முதியோர் காப்பகத்திலோ, வீட்டிலோ கழிக்க விரும்பினால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நான் செய்து தருகிறேன்; நான் அவரது மகன் போன்றவன்; மத்தியில் யாருடைய ஆட்சி அமைய வேண்டும் என நான் உங்களிடம் கேட்கவில்லை; எப்படிபட்ட ஆட்சி அமைய வேண்டும் என்று தான் கேட்கிறேன். இவ்வாறு மோடி பேசிய உள்ளார்.

Tags:

Leave a Reply