குஜராத் கலவரத்துக்காக நான் மன்னிப்புகேட்க தேவையில்லை, என் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால், என்னை தெரு முனையில் தூக்கிலிடுங்கள் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ஏஎன்ஐ. செய்திநிருவனத்துக்கு சிறப்புபேட்டி அளித்தார். அப்போது அவர் பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளுக்கு தயக்கமின்றி பதில் அளித்தார். இந்த பேட்டியின் போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த குஜராத் இனக் கலவரங்களுக்காக மன்னிப்பு கோருவீர்களா?

பதில்:- மன்னிப்பு கேட்பதால் எந்தபலனும் ஏற்படாது. இது போன்ற குற்றச்சாட்டுகளை அணுக இது சரியானவழி அல்ல. என் மீதான குற்றச்சாட்டில் கடுகளவாவது உண்மை இருந்தால், என்னை தெரு முனையில் பகிரங்கமாக தூக்கில்போடுங்கள். இன்னும் 100 ஆண்டுகளுக்கு இது போன்ற குற்றத்தை செய்வதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லாத அளவுக்கு அது முன்னுதாரணமாக அமையவேண்டும்.

நான் குற்றம் இழைத்திருந்தால், என்னை மன்னிக்கக் கூடாது. அது என்ன மன்னிக்கும் நடைமுறை? மன்னிப்பே இருக்கக் கூடாது. மோடி மன்னிக்கப்படவே கூடாது. மேலும், நான் 2002 மற்றும் 2007-ம் ஆண்டு சட்ட சபை தேர்தல்களில் தோற்றிருந்தால், மன்னிப்புகேட்கும் பிரச்சினையே எழுந்திருக்காது. ஒரு துதிபாடும் கும்பல் தான், கடினமாக உழைத்து, அலையை உருவாக்கி விட்டதாக கருதியது. ஆனால், மோடி தோற்கமாட்டான், சாகவும் மாட்டான்.

கேள்வி:- நீங்கள் சிறுபான்மையினரை ‘நாய்க் குட்டி’ யுடன் ஒப்பிட்டு பேசியதாக சர்ச்சைபேச்சு எழுந்ததே?

பதில்:- ஒருஎறும்பு இறந்தால்கூட மனம் வேதனை அடையும். அதற்காக, நான் பலியானவர்களை எறும்புடன் ஒப்பிடுவதாக அர்த்தம் அல்ல. இந்தியாவில் தான் வார்த்தைக்கும், வெளிப்படுத்துதலுக்கும் இடையே வேறுபாடு நிலவுகிறது. நானே நினைக்காத கோணத்தில், எனது வார்த்தைகளை திரித்துவிட்டனர்.

கேள்வி:- நீங்கள் முஸ்லிம் குல்லாயை அணிய மறுத்ததாக கூறப்பட்டதே?

பதில்:- எனக்கு ‘தாஜா’ செய்யும்கொள்கை பிடிக்காது. முஸ்லிம் குல்லாயுடன் யாராவது விளையாடினால், நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்.

கேள்வி:- உங்களது பொதுக் கூட்டங்களுக்காக கறுப்புபணம் பயன்படுத்தப்படுவதாக மத்திய சட்டமந்திரி கபில் சிபல் குற்றம்சாட்டி, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி உள்ளாரே?

பதில்:- காங்கிரஸ் அரசாங்கம் இன்னும் 25 நாட்கள் பதவியில் இருக்கும். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன். மக்களுக்கு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். எனது கூட்டங்களில் கறுப்புபணம் பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுவது, அந்தகட்சியின் தோல்வி பயத்தின் அறிகுறி. ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் செலவை தேர்தல்கமிஷன் கண்காணிக்கிறது. காங்கிரசிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால், அதை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பட்டும்.

கேள்வி:- அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் பற்றி?

பதில்:- கிரிமினல் அரசியல்வாதிகள் மீதான வழக்குளை விசாரிக்க தனிக் கோர்ட்டுகளை ஏற்படுத்தவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை கேட்டுக்கொள்வேன். இது பழி வாங்கும் நடவடிக்கை அல்ல. அரசியல் எதிரிகளை வீழ்த்துவதற்கும் அல்ல. நிர்வாக முறையை தூய்மை ஆக்குதற்காக.

இந்த தனிக் கோர்ட்டுகளில் ஓராண்டு காலத்தில் அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படும். குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். (பாராளுமன்றத்தில்- சட்ட சபைகளில்) அவர்களது இடங்கள் காலியாகிறபோது, அவற்றுக்கு குற்றமற்றவர்கள் வருவார்கள்.

கேள்வி:- நீங்கள் ஒருபெண்ணை பற்றி விவரம் சேகரித்த விவகாரம் குறித்து?

பதில்:- பெண்களுக்கு எதிரானகுற்றம் என்பது தேச அவமானம். நாம் ஒருதேசமாக இணைந்து பணியாற்ற வேண்டும். ராகுல்காந்தி இதை அரசியல் ஆக்கக் கூடாது. நானும் அதைச் செய்யக்கூடாது.

Tags:

Leave a Reply