எல்லோரும் ஒன்று என்பதே எனதுமந்திரம். மதச் சார்பின்மை பெயரால் நாட்டில் சகோதரர்களுக்கு இடையே பிரிவினையை உருவாக்குவதை அனுமதிக்க மாட்டேன். என்னை பிரதமர்பதவிக்கு தேர்ந்தெடுக்கும்படி இந்து, முஸ்லிம் என்று தனித்தனியாக கோரிக்கை வைக்கமாட்டேன். 125 கோடி மக்களுக்கும் ஒட்டுமொத்தமாக

கோரிக்கை வைக்கிறேன். நான் பிரதமர்பதவிக்கு பொருத்தமானவன் என்றால் என்னை தேர்ந்தெடுங்கள். இல்லா விட்டால், தோல்வியை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறியதாவது:மத்தியில், பாஜக., தலைமையிலான அரசு, ஆட்சிக்குவந்தால், ஊழலை ஒழிப்பதற்காக, 24 மணிநேரமும் பாடுபடுவோம். பழைய ஊழல் குப்பைகளை கிளறி நேரத்தை வீணடிப்பதைவிட, புதிய ஊழல்கள் நடைபெறாமல் இருப்பதில் கவனம் செலுத்தப்படும். ஏற்கனவே நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்கவும் வழி வகை செய்யப்படும்.

நான் பிரதமரான பின், என் மீது எந்தவிதமான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டாலும், அது குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். ஊழல், மிகக்கொடிய நோய். அதை வேரறுக்க, பாஜக., பாடுபடும்.எம்எல்ஏ., – எம்பி.,க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க, புதிய நடை முறைகள் உருவாக்கப்படும்.காங்கிரஸ் தலைவர் சோனியா, டில்லியில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்தது குறித்து கேட்கப்படுகிறது.நாட்டின் எந்த ஒருபகுதியிலும் வாழும், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோரை நேரில்சென்று சந்திப்பதில் தவறில்லை. இது, ஜனநாயக நாடு; யாரும் யாரையும் சந்திக்கலாம். ஆனால், ஒருகுறிப்பிட்ட மதத்தினரை, ஒருகுறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கக் கூறுவது தவறு; கண்டிக்கத்தக்கது.

தேர்தல் ஆதாயத்திற்காக, நாட்டின் எந்தஒரு மதத்தினரிடமும், பாஜக.,வுக்கு ஆதரவாக நான் ஓட்டுகேட்க மாட்டேன். சகோதர, சகோதரிகளாக வாழும் மக்களிடையே, மத அடிப்படையில் பிளவை உருவாக்கும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை; இதை ஒருபோதும் ஏற்க முடியாது.நாட்டில் வாழும், 125 கோடி மக்களும் பாரதத்தாயின் வயிற்றில் பிறந்தவர்களே; அனைவரும் ஒருதாய் மக்களே. இவர்களிடையே மத அடிப்படையில் பிளவை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களை ஏற்கமுடியாது. நான் இதுபோன்ற செயல்களில் ஒரு நாளும் ஈடுபடமாட்டேன்.

மத்தியில், பாஜக., ஆட்சிக்கு வந்தால், ஜிஎஸ்டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி அமல்படுத்தப்படும். இது, அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்புடன், நாட்டு நலனையும் கருத்தில்கொண்டு செயல் படுத்தப்படும்.இதன் மூலம், எந்த ஒரு மாநிலத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்படாது; மாறாக நாட்டின் வரிவருவாய் உயரும்.நாட்டின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு, தேவையான துறைகளில் மட்டும் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்போம். கூடியவரையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவோம். உள்நாட்டு உற்பத்தி அதிரிப்பதன் மூலம், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும். நவீன தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன், நாட்டின் வளர்ச்சி உறுதிசெய்யப்படும். நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் பெருக்கப்படும்.என்று அவர் கூறினார்.

Leave a Reply