பா.ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது நிருபர் எழுப்பிய கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– தேர்தலுக்கு பின்னர் பாரதீய ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மைக்கு சற்றே குறைவான இடங்கள் கிடைத்து, புதிய கூட்டணி கட்சி ஒன்று, மோடி தவிர்த்து பிற தலைவர் பிரதமர் பொறுப்பு ஏற்க வேண்டும் என கூறினால் என்ன ஆகும்?

பதில்:– எந்த சூழ்நிலையிலும் பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு நரேந்திர மோடிதான் பிரதமர். சட்டங்களால் மட்டுமே இந்த நாட்டை ஆட்சி செய்து விட முடியாது. தார்மீக உரிமை படைத்த தலைவரால்தான் ஆட்சி செய்ய முடியும். அந்த தார்மீக உரிமை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறவருக்கு உண்டு.

கேள்வி:– முஸ்லிம்கள் அணிகிற குல்லாவை அணிய மோடி மறுக்கிறாரே?

பதில்:– பிரச்சினை இல்லாத ஒன்றை பிரச்சினை ஆக்குகிற முயற்சி இது. இது எங்கள் அரசியல் எதிரிகளால் திட்டமிட்டு கையாளப்படுகிறது. நான் வேட்டி குர்தா அணிகிறேன். அவர் குர்தா பைஜாமா அணிகிறார். நீங்கள் சட்டை–பேண்ட் அணிகிறீர்கள். இது ஒரு பிரச்சினையா?

கேள்வி:– எந்த ஒரு குறிப்பிட்ட இனத்திற்கும் ஓட்டு கேட்டு வேண்டுகோள் விடுக்க மோடி மறுத்து விட்டாரே?

பதில்:– எந்த சாதிக்கும், இனத்துக்கும், சமயத்துக்கும் ஓட்டு கேட்டு, குறிப்பிட்ட விதமாக வேண்டுகோள் விடுக்கக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஓட்டு போடும் உரிமை உள்ளது. அதை சுதந்திரமாக விட்டு விட வேண்டும். நாங்கள் பாகுபாடின்றி சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

கேள்வி:– முஸ்லிம்களின் அச்சத்தை தீர்ப்பது பற்றி?

பதில்:– அவர்களது அச்சத்தை படிப்படியாக போக்கி வருகிறோம். பேச்சுவார்த்தை மூலம் அவர்களது அச்சம் அகற்றப்படும். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மோடியும் அவர்களுடன் பேசி வருகிறார். முஸ்லிம்கள் மோடிக்கு ஆதரவு தருவதை இப்போது நீங்கள் பார்க்கலாம். குஜராத்தில் இஸ்லாமியர்கள் மோடி அரசில் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார்கள். நாட்டின் பிற பகுதிகளை விட அங்கு அவர்களது தனிநபர் வருமானம் அதிகம். முஸ்லிம்கள், மோடியுடனும், பாரதீய ஜனதாவுடனும் நெருக்கமாக வருவார்கள். அப்போது அச்ச உணர்வு முடிவுக்கு வரும்.

கேள்வி:– 2002–ம் ஆண்டு கலவரங்களுக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரப்படுகிறதே?

பதில்:– மோடி எந்த தவறும் செய்யவில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவை எழவில்லை. மெஜாரிட்டியான கலவரங்கள் காங்கிரசின் ஆட்சியில்தான் ஏற்பட்டன. அவர்கள் மன்னிப்பு கேட்டார்களா?

கேள்வி:– அப்படியென்றால் காங்கிரஸ் முதலில் மன்னிப்பு கேட்டால், மோடி அடுத்து மன்னிப்பு கேட்பாரா?

பதில்:– நான் அப்படி சொல்லவில்லை. மோடி பக்கம் ஏதாவது தப்பு இருந்தால், கலவரங்களை அடக்க அவர் முயற்சிகள் எடுக்காமல் இருந்தால், அவர் மன்னிப்பு கேட்க முடியும். ஆனால் ஒரு முதல்–மந்திரியாக, கலவரங்களைக் கட்டுப்படுத்த அவர் மிகுந்த முயற்சி எடுத்தார். தன்னால் இயன்ற நடவடிக்கைகள் எடுத்தார். எந்த விசாரணையையும் அவர் பலவீனப்படுத்தவில்லை. பிறகு ஏன் இன்னும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள்? இது காங்கிரசின் பழிவாங்கும் அரசியல்.

அதிகளவில் தொல்லைகளுக்கு ஆளான அரசியல்வாதி மோடிதான். அவரது செல்வாக்கினால்தான் காங்கிரஸ் அவரை மூர்க்கத்தனமாக குறி வைத்து தாக்குகிறது. மோடியை எல்லோரும் ஏற்றுக்கொண்டு வருகின்றனர். அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. மோடியுடன் எந்த சாதியும், மதமும் வருத்தமாக இல்லை. காங்கிரஸ்தான் வகுப்புவாதத்தை எப்போதுமே கையில் எடுத்து வருகிறது என்பதை மக்கள் உணர்கின்றனர்.

குஜராத் கலவரங்களைப் பொறுத்தமட்டில், சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழு அவரை குற்றமற்றவர் என்று கூறி சான்று அளித்து விட்டபோதிலும் கூட, அவர் ஏராளமான அரசியல் தாக்குதல்களை எதிர்கொண்டு விட்டார். அரசியல் ரீதியில் பழிவாங்கும் குற்றச்சாட்டுகளை சந்தித்து விட்டார்.

கேள்வி:– கட்சி பெரிது என்ற பாரதீய ஜனதாவின் கொள்கைக்கு எதிராக, கட்சியை விட மோடிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதே? பாரதீய ஜனதா சுவரொட்டிகளில் மோடிக்குத்தானே முக்கியத்துவம் தரப்படுகிறது?

பதில்:– நாங்கள் யாரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கிறோமோ அவருக்கு முக்கியத்துவம் அளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். எனவேதான் மோடியை அதிகளவில் முன்னிலைப்படுத்துகிறோம். சுவரொட்டிகளில் அவரது படத்தை கூடுதலாக அச்சிடுகிறோம்.

முந்தைய தேர்தல்களில் வாஜ்பாய் முக்கியத்துவம் பெற்றார். அதைத் தொடர்ந்து அத்வானி முக்கியத்துவம் பெற்றார். இப்போது மோடி முக்கியத்துவம் பெறுகிறார். இவ்வாறு ராஜ்நாத் சிங் பதில் அளித்தார்.

Tags:

Leave a Reply