பா.ஜ.க.,வை விமர்சிப்பதன் மூலம் காங்கிரசை மறை முகமாக ஜெயலலிதா ஆதரிக்கிறாரோ? என்று சந்தேகம் எழுகிறது என பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் முரளீதரராவ் தெரிவித்துள்ளார். .

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது :–

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 நாட்களில் பிரசாரம் முடிவடைகிறது. இங்கு பா.ஜ.க அசுரவளர்ச்சி அடைந்து மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இங்கு நாங்கள் யாரையும் சார்ந்திருக்கவேண்டிய நிலை கிடையாது. அதிமுக.– திமுக.விற்கு மாற்றுசக்தியாக பா.ஜ.க விளங்கும்.தமிழகத்தில் வேலை வாய்ப்பு, கச்சத் தீவு பிரச்சினை, மின் வெட்டு, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன. இதற்குகாரணம் பலவீனமான காங்கிரஸ் அரசுதான். கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு உயிர் தன்மையுள்ள செயல்களையும் மத்திய அரசு செய்யவில்லை.

நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசியல் அளவில் மட்டுமல்லாது சமூக அளவிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விவசாயம், தொழில், வேலை வாய்ப்பு, விலை வாசியை கட்டுப்படுத்துதல், தெளிவான, ஊழலற்ற நிர்வாகமே எங்களது குறிக்கோள்.நாங்கள் பெரும் பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியை பிடிப்பது உறுதி. எனவே தமிழக பிரச்சினைகளை குறுகியகாலத்தில் நரேந்திரமோடி முடிவுக்கு கொண்டு வருவார்.இந்ததேர்தலில் தமிழகத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு முக்கிய தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங், நிதின்கட்காரி, நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் தீவிரபிரசாரம் செய்து வருகின்றனர்.முக.அழகிரி பா.ஜ.க.,விற்கு ஆதரவுதெரிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஊழலில் பெயர்பெற்ற காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு ப.சிதம்பரம்தான் காரணம்.

பா.ஜனதாவை முதல் அமைச்சர் ஜெயலலிதா விமர்சித்துபேசுவதன் மூலம் காங்கிரசுக்கு அவர் மறை முகமாக ஆதரவு அளிக்கிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. காவிரி நீர் பங்கீடு பிரச்சினையை தேசிய பிரச்சினையாகவே பா.ஜ.க கருதுகிறது. எனவே இந்த பிரச்சினையில் நடுநிலையோடு செயல்படுவோம். என்று அவர் கூறினார்.

Tags:

Leave a Reply