உ.பி.,யின் மாநிலம் வாராணசி மக்களவைத் தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக, வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக 3 கிலோ மீட்டர் தூரம் திறந்தவாகனத்தில் ஊர்வலமாக வந்த அவருக்கு ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வாராணசி தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக ஹெலிகாப்டரில் அவர் வியாழக்கிழமை வாராணசி வந்தார். வாராணசி ஹிந்து பல்கலைக் கழகத்துக்கு முதலில் சென்ற அவர், அங்குள்ள மறைந்த தலைவர் மதன்மோகன் மாளவியாவின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதனையடுத்து மறைந்த தலைவர்கள் வல்லபபாய் படேல், சுவாமி விவேகானந்தர் ஆகியோரது உருவச்சிலைகளுக்கும் அவர் மரியாதை செலுத்தினார்.

பின்னர் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக, லாகுராபீர் பகுதியில் இருந்து கச்சேரி பகுதிவரை 3 கிலோ மீட்டர் தூரம் திறந்த வாகனத்தில் பாஜக தலைவர்களுடன் மோடி ஊர்வலமாக சென்றார். அப்போது சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த பா.ஜ.க தொண்டர்கள், சங்குமுழக்கங்களுடனும் மலர்களை தூவியும் வரவேற்பு அளித்தனர். ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்த முஸ்லிம் பிரமுகர்களும் மோடிக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றமோடி, சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வேட்புமனு தாக்கல்செய்ய வசதியாக சுமார் 20 நிமிடம் காத்திருந்த பிறகு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மோடியின் வேட்புமனுவை, மறைந்த தலைவர் மதன்மோகன் மாளவியாவின் பேரன் கிரிதர் மாளவியா, பத்ம விபூஷண் விருது பெற்ற பாடகர் சாந்துலால் மிஸ்ரா, படகோட்டி வீர்பத்ர நிஷாத், நெசவுத்தொழிலாளி அசோக் ஆகிய 4 பேர் முன்மொழிந்தனர்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் மோடி பேசுகையில், “கங்கை (கங்கை நதி) தாயே என்னை வாராணசிக்கு அழைத்துள்ளார். வாராணசியில் இருக்கும் போது தாயின் மடியில் இருக்கும் குழந்தை போல், நான் உணர்கிறேன்.

தேர்தலில் வெற்றிபெற்று நான் பிரதமரானால், வாராணசி தொகுதியை உலகின் ஆன்மிக தலை நகராக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன். வாராணசி தொகுதியின் முன்னேற்றத்துக்கும், இங்குள்ள நெசவாளர்களின் முன்னேற்றத்துக்கும் நடவடிக்கை எடுப்பேன். குஜராத்தில் உள்ள சபர்மதி நதியை சுத்தப்படுத்தியது போன்று, கங்கை நதியையும் சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்’ என்றார்.

Leave a Reply