உத்தரபிரதேசத்தின் பூர்வாஞ்சல், பீகார் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் கட்சியின் வெற்றிக்காகவே மோடி, வாரணாசியில் போட்டியிடுவதாக உத்தரபிரதேச பா.ஜ.க மேலிட பொறுப்பாளரான அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;-

மோடி வாரணாசியில் போட்டியிடவேண்டும் என்று முடிவெடுத்தது, பா.ஜ.க.,வின் உள்கட்சி விவகாரம். நாட்டின் எந்தபகுதியிலும் அவரால் போட்டியிட முடியும். ஆனால் உத்தரபிரதேசத்தின் பூர் வாஞ்சல், பீகார் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் கட்சியின் வெற்றிக்காகவே, அவர் வாரணாசியில் போட்டியிடவேண்டும் என கட்சி முடிவுசெய்தது.

மோடி பிரதமரானால் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களிடம் ஒருபயத்தை உருவாக்கி வைத்துள்ளன. ஆனால் மோடி பிரதமரானால், அவரது அரசின் செயல் முறை மூலமே இந்தபயம் எல்லாம் விலகி விடும்.

வாரணாசியில் மோடி நடத்தியபேரணியை கணிசமான முஸ்லிம்கள் முழுமனதுடன் வரவேற்றுள்ளனர். எனவே மோடியை குறித்து எந்த ஒருநபரும் பயப்படவேண்டாம் என்று நான் தெளிவாக கூறுகிறேன். நாட்டில் மோடி அலை மட்டுமின்றி பா.ஜ.க.,வுக்கான அலையும் வீசுகிறது.

மோடியையும், பா.ஜ.க.,வையும் எப்படி உங்களால் பிரிக்கமுடியும்? அவர் பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளர். இந்த அலை எல்லாம் ஊடகங்களால் உருவாக்கப்பட்டவைதான். பா.ஜ.க.,வுக்கு நாடுமுழுவதும் மக்களிடம் ஆதரவு பெருகியுள்ளதால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 272க்கும் அதிகமான தொகுதிகளில், பா.ஜ.க வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

எனவே தேர்தலுக்குப் பின் புதியகூட்டணி உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நம்புகிறோம். மோடி பிரதமரானால், குஜராத்தில் முதல்மந்திரியாக யாரை நியமிப்பது? என்பதை கட்சி முடிவுசெய்யும். என்று அமித்ஷா கூறினார்.

Tags:

Leave a Reply