பாமரனுக்கு இருக்கும் ஜனநாயக கடமை , தேச பற்றுக்கூட படித்தவனுக்கும் , மேல்தட்டு மக்களுக்கும் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக படம்பிடுத்து காட்டுகிறது தற்போதைய தேர்தல் வாக்குப் பதிவுகள் .

சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 72% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் தர்மபுரியில் அதிகபட்சமாக 81% வாக்குகளும் , தென் சென்னையில் குறைந்த பட்சமாக 59% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

வளர்ச்சியின் வாசனையை கூட முகர்ந்து பார்க்காத கூலித் தொழிலாளர்களும், படிக்காத பாமரனும் நிறைந்த தர்மபுரியில் வாக்கு சதவிதம் அதிகமாகவும் . வளர்ச்சியின் அனைத்து முகங்களையும் அனுபவித்து வரும் படித்தவர்களும் , மேல்த்தட்டு மக்களும் அதிகம் நிறைந்த தென் சென்னை(59%), மும்பை(53%), பெங்களூர்(59%) உள்ளிட்ட பெரும் நகரங்களில் வாக்கு சதவிதம் மிகக்குறைவாகவும் பதிவாகியுள்ளது. அதாவது 40% படித்த, மேல்தட்டு மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

ஏன் புறக்கணித்தார்கள் பல லட்சம் கிராமங்கள் மின் பற்றாக்குறையால் இருண்ட போதிலும் , ஒரு சில பெருநகரங்கள் மட்டும் 24 மணி நேரமும் தங்கு தடையற்ற மின்சாரத்தின் மூலம் ஒளிரச் செய்யப்படுகிறதே அதற்காகவா?.

படித்தவர்களுக்கு வேலைவாய்புகளை அதிகம் உருவாக்க பல ஆயிரம் கோடி மதிப்பிலான அரசாங்க நிலங்கள் அடிமாட்டு விலைக்கு அந்நிய நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப் படுகிறதே அதற்காகவா?.

ராமன் ஆண்டால் எண்ண இராவணன் ஆண்டால் எண்ண எங்களுக்கு கவலை இல்லை, மாதம் பல லட்சங்களை சம்பாதிக்கும் எங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை என்ற மனோபாவமா?.

ஏழைகளின், பாமரனின் வாழ்க்கையில் ஏற்றத்தை தர நல்ல அரசாங்கத்தால் மட்டுமே முடியும். அதே நேரத்தில் மோசமான அரசாங்கத்தால் அதிகம் பாதிக்கப்பட போவது படித்தவர்களும், நடுத்தர வர்கத்தினரும் , மேல்தட்டு மக்களுமே தவிர ஏழைகள் அல்ல , காரணம் ஏழைகளிடம் மேலும் இழப்பதற்கு ஏதும் இல்லை.

தமிழ்தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply