பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு தற்கொலைப் படையினரால் ஆபத்து உள்ளது. அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் என்று விஷ்வ இந்துபரிஷத் (வி.எச்.பி) தலைவர் அசோக் சிங்கால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைப்புகள் நரேந்திரமோடியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அரசுக்கு தகவல்கள் அளித்துள்ளன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதுபோல் இந்தத் தாக்குதல் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்திய முஜாகிதீன், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ, நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகள் சதித்திட்டங்களை தீட்டியுள்ளனர். தாவூத் இப்ராகிமை கைதுசெய்து இந்தியாவிற்கு கொண்டு வருவதாக மோடி அண்மையில் பேசினார். அதன் பிறகு தீவிரவாதிகளின் செயல்பாடுகள் தீவிரமடைந் துள்ளதாகத் தெரிகிறது.

நீண்ட காலமாக நமது நாட்டின் மிகப் பெரிய சவாலாக தீவிரவாதம் உள்ளது. இதை அரசு புரிந்துகொண்டு தீவிரவாத அமைப்புகளை செயலிழக்க செய்து அதன் முழு இயக்கத்தையும் கூண்டோடு ஒழிக்கவேண்டும். இதன் முக்கிய தலைவர்கள் மற்றும் தீவிரவாதிகள் குறித்து தீவிரவிசாரணை நடத்தி மோடியின் பாதுகாப்புக்கு வழிவகை செய்யவேண்டும்.

நரேந்திர மோடி தொடர்ந்து பல ஆண்டுகளாக தீவிரவாதிகள் குறிவைத்துள்ள பட்டியலில் இருந்துவருகிறார். அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த ஆண்டு பாட்னாவில் நடைபெற்ற மோடியின் பிரச்சார கூட்டத்தில் தொடர்குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

இந்திய முஜாகிதீன் தீவிரவாதக் குழுவின் தலைவர் யாசின்பட்கல், ‘மோடியை கொல்வதற்காக எதையும் செய்வோம். எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்போம்’ எனக்கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் தீவிரவாதியான மவுலானா மசூத் அசார், ‘மோடி பிரதமரானால் அவரைக்கொல்வோம்’ என அறிவித்து அதற்காக தற்கொலைப் படையினருக்கு பயிற்சி அளித்துவருகிறார்.

எனவே இது குறித்து நாட்டின் மிகவும் உயரிய அலுவலகமான குடியரசு தலைவரிடம் முறையிட்டுள்ளோம். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் மூலமாக மோடியின் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply