அமெரிக்க அரசியல்பாணியில் இந்திய பிரதமர் வேட்பாளர்கள் இடையே பொதுத்தளத்தில் விவாதம் நடத்தப்படுவதற்கு, பாஜக மூத்த தலைவர் அத்வானி விருப்பம் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்டின் அல்மோரா மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அஜர் தாம்தாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது அத்வானி இதனை கூறியுள்ளார்.

“பல்வேறு அரசியல்கட்சிகள் பிரச்சார பேரணிகள் நடத்துவதற்கு பதிலாக, தேர்தலில் களமிறங்கும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பவர்களிடையே பொதுத்தளத்தில் விவாதம் நடத்தலாம்.

இதற்கான ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவேண்டும். இந்திய ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு, இது போன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது” என்றார் அத்வானி.

அமெரிக்க தேர்தலில், அதிபர்தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபடுவது அந்நாட்டு அரசியல் நடை முறையில் உள்ளது. அதன் அடிப்படையிலேயே அவ்வாறான விவாதம் இந்தியாவிலும் நடத்தப்படவேண்டும் என்று அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply