மேற்கு வங்கத்தில் சாரதா குரூப் நிறுவனத்தின் பல ஆயிரம்கோடி ரூபாய் ஊழல்குறித்து சி,பி,ஐ
விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஊழல் குறித்த சிபிஐ விசாரணைக்கு மறுத்துவந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு இதுஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. மேற்கு வங்காளத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் லட்சக்கணக்கான சிறுமுதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிகொடுக்க வில்லை என்று புகார் கூறப்பட்டது.

கிராமப்புறங்களில் இந்த கம்பெனியில் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். மொத்தத்தில் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஊழல் நடந்ததாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக இந்நிறுவனத்தின் தலைவர் சுதீப்சென் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கும் இந்த சிட்பண்ட் நிறுவனத்துடன் தொடர்பிருப்பதாக புகார்கூறப்பட்டது.

ஏமாற்றப்பட்டவர்களுக்கு அரசுசார்பில் இழப்பீடு வழங்குவதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்படுவதாகவும், சிகரெட்டுக்கு 10 சதவீதவரியை அதிகரித்து இந்ததொகை ஈடுகட்டப்படும் என்றும் மம்தாபானர்ஜி அறிவித்திருந்தார்.

ஆனால் சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என்று விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்து விட்டார். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் இந்த ஊழலை ஒரு பிரச்சனையாக முன்வைத்து பாஜக பிரச்சாரம் செய்தது. இது மம்தா பானர்ஜிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சாரதாகுரூப் நிறுவனத்தின் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பில் இந்தமுறைகேட்டில் அரசியல் வாதிகளும் ஈடுபட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.பணம் பதுக்கப்பட்டு சதிசெய்யப்பட்டு இருக்கிறது. இதை முறையாக விசாரிக்க வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Leave a Reply