அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டது என்பதால் மட்டுமே தேர்தல் ஆணையம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல என்று பா.ஜ.க மூத்த தலைவர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜேட்லி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியல்சட்டத்தால் உருவாக்கப்பட்டது என்பதால் மட்டும் ஒரு அமைப்பு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தவறு என்பது மனிதஇயல்பு. விமர்சனம் என்பது தவறிழைத்த அமைப்பும் அங்கு எதிர் காலத்தில் பதவிக்கு வரக்கூடியவர்களும் தவறுசெய்யாமல் இருப்பதற்கான எச்சரிக்கையாகும்.

நீதி மன்றங்கள், தேர்தல் ஆணையம், பிரதமர், அமைச்சரவை, நாடாளுமன்றம், தலைமைக்கணக்கு அதிகாரி அலுவலகம் ஆகியவை அரசியல்சட்டத்தால் உருவாக்கப்பட்டவை. அவற்றைத் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தெரிவுசெய்யப்பட்ட நபர்கள் நிர்வகிக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் மாபெரும் தவறுகள்செய்ததை வரலாறு கண்டுள்ளது.

இங்கிலாந்தில் நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிக்கலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். நீதி என்பது தொடர்ந்து கண்காணிக்கப் பட வேண்டும். ”நீதிபதிகள் தவறு இழைக்கலாம், எனவே அவர்களைத்தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது” என்று புகழ் பெற்ற பிரிட்டிஷ் நீதிபதி லார்ட் டென்னிங்ஸ் கூறியுள்ளார். இந்திய நீதிபதிகளும் தங்களது முடிவுகளை விமர்சிக்கலாம் என்றும் ஆனால் நீதிபதிக்கு உள்நோக்கம் கற்பிக்கப்படக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.

இங்கிலாந்தில் மூன்று நீதிபதிகள் தலைகீழாகத் தொங்குவதைப்போன்று ஒரு ஆங்கில பத்திரிகை புகைப்படம் வெளியிட்டு, மூன்று கிழட்டுமுட்டாள்கள் என்று அதற்கு தலைப்பு கொடுத்திருந்தது. ஆனால், பிரிட்டிஷ் பிரபுக்கள்சபை இதற்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கமறுத்தன. அவர்களில் ஒருநீதிபதி பின்னர் கூறும்போது, “அது எப்படி அவமதிப்பாகும்? நான் கிழவன்தான். என்னுடைய ஞானம் ஒருவரின் கருத்துதான்”என்று கூறினார்.

அவசர நிலைக்காலத்தில், ஆட்கொணர்வு மனு ஒன்றின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பையும், விமர்சனங்களையும் முன்னணிப் பத்திரிகை ஆசிரியர்களான எஸ்.முல்கோங்கர், ஷ்யாம்லால் ஆகியோர் விமர்சித்திருந்தனர். நீதி மன்றத்துக்கு துணிச்சல் இல்லை என்று கூறிய அவர்கள்மீது நீதிமன்ற அவமதிப்புக்குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப் பட்டனர். அவர்களின் நோக்கம் நீதியமைப்பை வலுப்படுத்துவது தானே தவிர, வலுவிழக்க செய்வதல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கடந்தகாலத்தில், நடுநிலையாக செயல் படவில்லை என்று தேர்தல் ஆணையர் ஒருவருக்கு எதிராக நான் பிரச்சாரம் மேற்கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுஒன்றின் மீது, தலைமை தேர்தல் ஆணையர் அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். எனது குற்றச்சாட்டு சரிதான் என்று அவர் கூறினார். ஆனால் அதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது வேறுவிஷயம்.

பிரதமர்கள், அமைச்சர்கள், சபா நாயகர்கள் மற்றும் அவர்களின் தீர்ப்புகள் தொடர்ந்து விமர்சிக்கப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களும், தலைமைக்கணக்கு ஆணையர்கூட விட்டு வைக்கப்படுவதில்லை. அரசியல் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதால் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்று எங்கே கூறப்பட்டுள்ளது? தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டது என்பதால் மட்டும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. மோடி பிரச்சாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து சரியான பதிலடியை வாரணாசி மக்கள் பிரமாண்டப் பேரணியின் மூலமாகக் கொடுத்துவிட்டனர் இவ்வாறு அருண்ஜேட்லி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply