பொய்யான வாக்குறுதிகளை தந்து தேர்தலில் வெற்றிபெற நினைத்தவர்களின் பேச்சுக்களை பிரச்சாரமேடையை தாண்டி வெளியே பரவாமல் தடுத்தது சமூக வலைத் தளங்கள்தான், மேலும் உள்ளூர் பிரச்னைகளை நான் அறிந்து கொள்ள சமூக வலைத்தளங்கள் உதவிசெய்தன என நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி டுவிட்டர் வலைத் தளத்தில் கூறியிருப்பதாவது:

வெற்றிகரமாக தேர்தலை முடித்ததற்காக இந்தியமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் ஆணையம் மற்றும் ஒட்டுமொத்த தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு வீரர்களையும் சுமுகமாக தேர்தலை நடத்தியதற்காக பாராட்டிக் கொள்கிறேன். சிறந்த தேர்தலை நடத்தி இந்தியா மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்த விஷயம் என்னவென்றால், வாக்குப் பதிவு முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளதுதான். மழையிலும், வெயிலிலும் மக்கள்வந்து வாக்களித்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலுமே ஆளும்கட்சிதான் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும். பிறகட்சிகள் அதற்கு பதிலளிக்க வேண்டிவரும். ஆனால் இந்த தேர்தலில் ஆளும்கட்சி பிரச்சாரத்தை தூண்டுவதாகவும் இல்லை, ஆக்கப் பூர்வமாகவும் இல்லை. வெறுமனே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தது.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், வளர்ச்சி, நல்லநிர்வாகம் ஆகியவற்றில் மட்டுமே பிரச்சார கவனத்தை வைத்திருந்தன. எங்கெல்லாம் நான் சென்னேறேனோ அங்கெல்லாம் உள்ளூர்மக்களுடன் கலந்து பேசினேன். உள்ளூர் பிரச்னைகளை நான் அறிந்து கொள்ள சமூக வலைத்தளங்கள் உதவிசெய்தன. இந்த தேர்தலின் போது, தலைவர்கள் அளிக்கும் பொய்யான வாக்குறுதிகள் அந்தபிரச்சார மேடையை விட்டு வெளியே பரவாமல் சமூக வலைத்தளங்களால் தான் தடுக்கப்பட்டன. இது சமூக வலைத் தளங்களின் மிகப் பெரிய சக்தியை காண்பிக்கிறது. என்று மோடி அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply