தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. தமிழில் ஒரு பாடல் உண்டு. இவர் போட்ட கணக்கொன்று, அவர் போட்ட கணக்கொன்று, எல்லாமே தவறானது என்பார்கள். அது தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துவிட்டது. பா.ஜ.க.வும், தேசிய ஜனநாயக கூட்டணியும் வெற்றிபெறும் என்று எல்லோரும்

எதிர்பார்த்தார்கள். ஆனால், இவ்வளவு பெரிய மகத்தான வெற்றியை யாரும் எதிர்பார்க்கவில்லை. மோடி என்ற ஒரு தாமரைப்பூ மட்டுமல்ல, பா.ஜ.க. என்ற 282 தாமரைப்பூக்களும், தேசிய ஜனநாயக கூட்டணி என்ற 333 தாமரைப்பூக்களும் மலர்ந்துவிட்டன. பா.ஜ.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைத்துள்ளது.

ஓட்டுமொத்த இந்தியாவில் உள்ள 81 கோடி வாக்காளர்களில், 66.38 சதவீதம் பேர்கள் இந்தமுறை ஓட்டுபோட்டார்கள். இதுவரை இல்லாத அளவு இவ்வளவு பேர்கள், அதிலும் குறிப்பாக முதல் முறையாக ஓட்டுப்போட்டவர்கள், இளைஞர்கள், பெண்கள் பெருந்திரளாக ஓட்டுபோட்டவுடனேயே, ஏதோ ஒரு முடிவை மனதில் வைத்துத்தான் அவ்வளவு பேர்களும் ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என்று கணிக்க முடிந்தது. ஏனெனில், இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட நேரத்தில் 1984–ல்தான் அனுதாப அலையால் 64.01 சதவீத மக்கள் ஓட்டு போட்டனர். அது அனுதாப அலை என்றால், இப்போது மக்கள் போட்டு இருக்கும் 66.38 சதவீத ஓட்டுகளுக்கு காரணமான அலை ஊழலுக்கு எதிர்ப்பான அலை, மோடி அலை, காங்கிரஸ் மீது ஏற்பட்ட கோப அலை என்பதை யாரும் மறுக்கமுடியாது. 1984–ல் காங்கிரஸ் அணி 415 இடங்களில் வெற்றி பெற்றதற்கு பிறகு, எந்த கட்சியும் 205 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவில்லை. பா.ஜ.க. கூட இதுவரை 200 இடங்களைத் தாண்டவில்லை. இதுபோல, காங்கிரஸ் கட்சிக்கும் இவ்வளவு மோசமான தோல்வி ஏற்பட்டதில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை.

வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்ததற்கு பிறகு, 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் பா.ஜ.க. ஆட்சியைப்பிடித்து இருக்கிறது. 1980–ம் ஆண்டு வாஜ்பாயால் தொடங்கப்பட்ட கட்சி பா.ஜனதா கட்சி. பா.ஜனதா கட்சிக்கு வாஜ்பாயின் தலைமையால் மக்கள் ஆதரவு பெருகியபோதும், 1984–ல் பாராளுமன்றத்தில் 2 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது. ஆனால், அதன்பிறகு அபார வளர்ச்சி அடைந்தது. 1989–ல் 85 இடங்களில் வெற்றி பெற்றது. 1992–ல் 120 இடங்களிலும், 1999–ல் 182 இடங்களிலும் வெற்றி பெற்றது. முதல் முறையாக 1996–ம் ஆண்டு மே 16–ந் தேதி முதல் ஜூன் 1–ந் தேதி வரையிலும், பின்பு 1998–ம் ஆண்டு மார்ச் 19–ந் தேதி முதல் 2004–ம் ஆண்டு மே 22–ந் தேதி வரையிலும் இருமுறை பிரதமராக இருந்தார். பா.ஜ.க.வில் மென்மையான அணுகுமுறை கொண்டவர் வாஜ்பாய். இரும்புக்கரம் கொண்டு உறுதியான நடவடிக்கைகள் எடுப்பவர், அத்வானி. நரேந்திர மோடி, இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்த கலவை.

நன்றி; தினதந்தி

Tags:

Leave a Reply