பா.ஜ.க நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வுசெய்யப்பட்ட நரேந்திர மோடி, கண்ணீர் மல்க மிகவும் உருக்கமாக பேசினார்.

முன்னதாக நாடாளுமன்ற மத்திய அரங்குக்குள் நுழைந்த போது மண்டியிட்டு வணங்கினார். பின்னர் மூத்த தலைவர் அத்வானியின் பாதம் பணிந்து வாழ்த்துபெற்றார்.

பின்னர் நடந்த கூட்டத்தில் அத்வானி முன்மொழிய, சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி, நிதின் கட்காரி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் வழிமொழிய, பா.ஜ.க நாடாளுமன்றக் குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டார்.

பின்னன் மோடி பேசியதாவது;

“எனக்கு நீங்கள் அளித்துள்ள இந்தபொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். மக்களவை தேர்தல் முடிவு ஜன நாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஒருவேளை மத்தியில் தொங்கு பாராளுமன்றம் அமைந்திருந்தால் அது முந்தைய ஆட்சியின்மீதான வெறுப்பின் விளைவாகவே மட்டும் இருந்திருக்க முடியும்.

ஆனால், பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. இதற்கு, மக்கள் பா.ஜ.க மீது வைத்திருந்த நம்பிக்கை மட்டுமேகாரணம். மக்கள் மத்தியில், அவர்கள் எண்ணங்கள் பா.ஜ.க.,வால் பூர்த்தி செய்யப்படும் என்ற புதிய நம்பிக்கை மலர்ந்துள்ளது. மக்கள் பாஜக மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிகுந்த நன்றி. இளைஞர்கள் முன்னேற்றமும் மகளிர் முன்னேற்றமும் பா.ஜ.க.,வின் முதன்மை கடமைகளாக இருக்கும். ஏழை மக்களுக்காக இந்த ஆட்சிநடைபெறும்.

இந்த வேளையில், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு தலை வணங்குகிறேன். தேர்தல் வெற்றிக்காக உழைத்த பாஜக தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பாஜக என் தாய்க்கு சமம். தாய்க்கு மகனைத் தவிர வேறுயார் நல்ல முறையில் சேவகம்செய்ய முடியும்.

பிரதமராகி மக்களுக்கு நான் ஆற்றப்போகும் சேவையை எனது கடமையாகவே கருதுகிறேன். கடந்த 5 தலைமுறைகளாக பாஜக தொண்டர்கள் பட்ட அரும்பாட்டுக்கு கிடைத்த வெற்றி இது.

மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆட்சி செலுத்துவேன். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எதுவுமே செய்யவில்லை என்று பழிக்க மாட்டேன். அவர்கள் செய்த நல்ல காரியங்களுக்காக அவர்களை பாராட்டுகிறேன்.

இத்தருணத்தில், பாஜக மூத்த தலைவர் வாஜ்பாய் இங்கு இல்லாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நான் இங்கு நிற்க காரணம் கட்சியின் மூத்த தலைவர்கள் அளித்த உத்வேகமே. கட்சிக்கு மிஞ்சியவர்கள் யாரும் இல்லை. அனைவரும் கட்சிக்கு கட்டுப்பட்டுவர்களே.

மக்கள் நலனே முக்கியம். மக்களுக்கு நன்மை செய்யும் நேரம் துவங்கிவிட்டது. பாஜக எம்.பி.க்கள் மக்கள் சேவையை தங்கள் பதவிக்கான கடமையாக மட்டும் நினைக்காமல் அதை ஒரு புனிதமான பணியாக கருத வேண்டும். மக்களுக்கான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமே தவிர பதவிகளுக்கு அல்ல.

கடந்த செப்டம்பர் 13-ம் தேதி, கட்சி என்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு நொடியையும், கட்சியின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு பிரச்சாரத்துக்கு அர்ப்பணித்தேன்.

தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு மே 10-ல் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் ஒரு அறிக்கை அளித்தேன். அதே போல் மக்கள் என்னை பிரதமராக்கியிருப்பதற்கு 2019-ல் அவர்களுக்கு எனது செயல்திறன் அறிக்கையை அளிப்பேன்.

இந்திய தேசம் மிகுந்த ஆற்றல் கொண்டது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஒரு அடி முன்னெடுத்து வைத்தால், தேசம் 125 கோடி அடிகள் முன்னேறிச் செல்லும்.

நன்நம்பிக்கையே நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும். இந்திய ஜனநாயகத்தில் மட்டுமே ஒரு சாதாரண நபர் நாட்டின் பிரதமர் போன்ற உயர் பதவியை அடைய முடியும்” என்று மோடி பேசினார்.

Tags:

Leave a Reply