ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய துணைத்தூதரகம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய 4 தலிபான் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம்குறித்து பிரதமராக பொறுப்பேற்க்க உள்ள நரேந்திர மோடி., ஆப்கானிஸ்தானுக்கான இந்தியதூதரை தொடர்பு கொண்டு நிலைமைகளை கேட்டறிந்தார்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மே 26-ந் தேதி பதவியேற்க உள்ளார். தமது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான், ஆப்கான், இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கும் மோடி அழைப்பு அனுப்பி வைத்துள்ளார்.

ஈரான் எல்லையில் உள்ள ஹெராத் நகரத்தில் உள்ள துணைதூதரகத்துக்குள் உள்ளே நுழையமுயன்ற தலிபான் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப் படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து தூதரகத்தை அங்கு பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்த இந்தோ- திபெத்படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். அவர்களுடன் ஆப்கானிஸ்தான் ராணுவமும் இணைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது.

இருதரப்புக்கும் இடையே பலமணிநேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 4 தலிபான்கள் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் தூதரகத்தில் இருந்த பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply