மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்ததை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை என்று பாஜக செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மாலை மலர் ஊடகத்திற்கு இவ்வாறு பேட்டி வழங்கியுள்ளார்.

“இதற்கு முன்பு கடை பிடிக்காததை, ஒரு புதுமுறையை, புதுமையான ஆலோசனைகளோடு மோடி எடுத்துள்ளார். அவருடைய இந்த நடவடிக்கைதான் முத்திரை பதித்துள்ளது.

பாரததேசம் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்து அதன் தொடர்ச்சியாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார். இது ஜனநாயக நடைமுறையின் வெளிப்பாடு.

இதேமாதிரி ஜனநாயகம் என்பது நம் நாட்டில் மட்டுமல்ல. சார்க்நாடுகளும் ஜனநாயகத்தை நம்பி உள்ளன. மிகப் பெரிய ஜனநாயக நாடான பாரததேசத்தில் பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்ததில் தவறு இல்லை. இந்த ஜனநாயகமகிழ்ச்சி கொண்டாட்டத்தில் அந்த நாடுகளையும் பங்கேற்க வைக்கும் கண்ணோட்டத்துடன் இதை பார்க்கவேண்டும்.

புதிய பிரதமர் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் நல்லெண்ணத்தை உருவாக்குவதற்கான பொறுப்பு மிக்க அடையாளமாகவே இதை கருதவேண்டும்.

நல்ல உறவோடு எந்த பாகுபாடு இயலாமல் எல்லோரையும் பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்துள்ளோம். அண்டை நாடுகளுடன் நல்ல உறவு வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர வேறு எதுவும் இல்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நாம் எந்த தலைவர்களையும் அழைக்கவில்லை. எல்லா நாடுகளையும் தான் அழைத்துள்ளோம்.

நாடுகள் என்றும் இருக்கக் கூடியது. உறவுகள் என்றைக்கும் வேண்டுவது.

இதனால் எந்த நெருடலும் இல்லை. அந்த உணர்வோடு இதை நாம் பார்க்க கூடாது. இதன் மூலம் நமது நிலைப்பாடு மாறிவிட்டது என்று சொல்லமுடியாது.

கூட்டணி கட்சி தலைவர்களின் சந்தேகங்களுக்கு நிச்சயமாக விளக்கம் சொல்வார்கள். அழைப்பு கொடுத்த பிறகு நீங்கவராதீங்க என்று யாரையும் சொல்ல முடியுமா? எனவே ராஜபக்சேவாகட்டும், நவாஸ் செரீப்பாகட்டும் யாருடைய அழைப்பையு-ம் மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு இல்லை.”

Leave a Reply