காலை 8.30 மணிக்கே நரேந்திர மோடி தனது பிரதமர் பணியை தொடங்கிவிட்டார். ஒரேநாளில் ஐந்து நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து முன்னு தாரணத்தை ஏற்படுத்தியும் உள்ளார்.

நாட்டின் 15வது பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதை தொடர்ந்து செவ்வாய்க் கிழமை காலை 8.30 மணிக்கு அவர் தன்பணியை தொடங்கினார். அமைச்சர்களின் இலாகாக்கள் விவரங்களை முடிவுசெய்து அறிவித்தார். குஜராத் பவனில் இருந்து பிரதமர் அலுவலகம் சென்ற அவர் அங்கு மகாத்மா காந்தி படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார்.

பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து, சந்திக்கவுள்ள வெளிநாட்டு தலைவர்களின் நிகழ்ச்சி விவரங்களை முடிவுசெய்தார். கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில்விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி அளிக்க உத்தரவிட்டார். காலை 11 மணியளவில் பிரதமராக பொறுப் பேற்றதற்கான கோப்பில் முறைப்படி கையெழுத்திட்டார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத்கர்சாய், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பூடான் பிரதமர் ஷெரிங்தோப்கே, நேபாள பிரதமர் சுஷில்கொய்ராலா, பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின்சர்மின் சவுத்ரி ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்து அந்த நாடுகளுடன் இந்தியாவின் உறவு, வெளியுறவு விவகாரங்கள், முக்கிய பிரச்னைகளுக்கான தீர்வுகள்குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாலை 5.30 மணியளவில் புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கறுப்புபணத்தை வெளிநாடுகளில் இருந்து மீட்டுக்கொண்டு வர ஓய்வுபெற்ற நீதிபதிகள் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் ஆகியோரை தலைவர் மற்றும் துணைத் தலைவர்களாக கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பதற்கான கோப்பு உள்ளிட்ட முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

நரேந்திரமோடி தற்போது குஜராத் இல்லத்தில் தங்கியுள்ளார். பிரதமர் இல்லத்துக்கு குடிபெயர இன்னும் சிலதினங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply