தமிழ்நாட்டில் புதிய தொழிற்ச் சாலைகளை உருவாக்கவும் நலிவடைந்த தொழிற் சாலைகளை மேம்படுத்தவும் முதல்வர் ஜெயலலிதாவுடன் விரைவில் ஆலோசனை நடத்துவேன் என மத்திய கனரக தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

"மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதும் கனரக தொழிற் சாலைகள் மூலம் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவேன்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் "பெல்' நிறுவனத்தில் தொழிலாளர் பிரச்னை உள்ளது. அந்நிறுவனத்துடன் தொடர்புடைய ஏராளமான தொழிற்சாலைகள் நலிவடைந்து மூடப்படும் நிலையில் இருப்பதாக அறிகிறேன். எனவே, அவற்றை மேம்படுத்தவும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.

தேசிய நலன் சார்ந்த திட்டங்களை வெற்றிகரமாக செயல் படுத்தும் நோக்குடன் பிரதமர் நரேந்திரமோடி சில திட்டங்களைத் தீட்டியுள்ளார். அவற்றை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் சேர்ந்துபணியாற்ற வேண்டும். அப்போதுதான் அதன் பலன் மக்களுக்கு சென்றடையும். இதை கவனத்தில்கொண்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பேன்.

புதிய தொழிற் சாலைகளை உருவாக்கவும் நலிவடைந்த தொழிற்ச் சாலைகளை மேம்படுத்துவது குறித்தும் அவருடன் ஆலோசனை நடத்துவேன்' என்றார்

Leave a Reply