ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்ற குழு, அரசியல் ஆலோசனை குழு கூட்டம் வைகோ தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

* எளிய குடும்பத்தில் பிறந்து, ஒரு துறவி யாகவே வாழ்ந்து, தனது தலைமை பண்பை நாட்டின் கோடானு கோடி மக்கள் மனதில் பதியவைத்து, உன்னதமான வெற்றியை ஈட்டி, இந்தியாவின் 15 ஆவது பிரதமராகப் பொறுப்பு ஏற்று உள்ள நரேந்திரமோடிக்கு மதிமுக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

* நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு அளித்து வரலாற்றுச் சிறப்புக்குரிய வெற்றியை வழங்கிய இந்தியநாட்டின் வாக்காளப் பெருமக்களுக்கும், தமிழ்நாட்டில் அக்கூட்டணியில் இடம்பெற்று இருந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு, 75 இலட்சத்து 24 ஆயிரம் வாக்குகளை வழங்கிய தமிழக வாக்காளர்களுக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

* பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்துகொண்டதற்கு எதிர்ப்புத்தெரிவித்து, மே 26 ஆம் நாள் டெல்லி ஜந்தர் மந்தரில் கருப்புக்கொடி அறப்போரை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அவர்களுக்கு இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

மே 26 ஆம் தேதி அன்று மாலை ஆறுமணி அளவில் நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றார். 27 ஆம்தேதி கூடிய அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே மிகவும் மெச்சத்தக்க முடிவு எடுக்கப்பட்டது. கறுப்புப்பணத்தை மீட்க, உச்சநீதிமன்ற ஆணையின்படி ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில், சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் துணை தலைவராக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அர்ஜித்பசாயத் பதவி வகிப்பார். வருவாய் உளவுப் பிரிவு இயக்குநர், போதைப்பொருள் தடுப்புத் துறையின் இயக்குநர், பொருளாதார உளவுப் பிரிவின் இயக்குநர், மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின் இணைச்செயலர் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெறுகிறார்கள்.

'இந்தியப் பொருளாதாரத்தைப் பாழ்படுத்தும் கறுப்புப்பணத்தை மீட்பேன்' என்று தேர்தல் பிரச்சாரத்தில் தான் கூறியதை பிரதமர் நரேந்திரமோடி, தனது முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே நிறைவேற்றியதற்கு, இந்த கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply