நிதிச் சுமையில் இருந்து ரயில்வே துறையை மீட்க ரயில்கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் ரயில்வேத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில்:

மத்தியில் பாஜக தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ளதால், ஜூலை மாதத்தில் 2014-15-ஆம் ஆண்டின் இடைக்கால ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

பிரதமர் நரேந்திரமோடி ஏற்கனவே விரைவான மற்றும் வேகமான புல்லட் ரெயில்களை அறிமுகப்படுத்த பரிந்துரை செய்துள்ளார். இதற்கு முந்தைய ரெயில்வேமந்திரி மல்லிகார்ஜூன கார்கே ரெயில் கட்டணங்களை 10 சதவீதம் வரை உயர்த்தி பெரும்சுமையை ஏற்றி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எனக்கு பொறுப்பு அதிகமாக உள்ளது. ரெயில்வேயில் 13.2 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். எனவே இந்ததுறை குறித்து ஆய்வுசெய்ய எனக்கு எப்படியும் ஒருமாத காலம் பிடிக்கும்.

வலிமையான இந்தியாவை உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் வகையில் ரயில்வே பட்ஜெட் வடிவமைக்கப்படும். அதிவிரைவு ரயில்கள், புல்லட்ரயில்கள் போன்ற நரேந்திர மோடியின் தொலை நோக்கு கனவு திட்டங்களை செயல்படுத்த முழுமையான முயற்சி மேற்கொள்வேன்.

நிதிச் சுமையில் இருந்து ரயில்வேத் துறையை மீட்க ரயில்கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது. பயணிகளை எவ்வகையிலும் பாதிக்காதவாறு ரயில் கட்டண உயர்வு இருக்கும். ரயில்வேத் துறையை பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுவேன் என்றார்.

Leave a Reply