மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டே, சாலைவிபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். டில்லி விமான நிலையம் அருகே இவருடைய கார்மீது எதிரே வந்தவாகனம் மோதியதில் விபத்து நிகழ்ந்தது. இதில் காயம் அடைந்த அமைச்சர் கோபிநாத் முண்டே, எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

கோபிநாத் முண்டேக்கு தலையிலும் மார்பிலும் காயம் ஏற்பட்டதாகவும், ரத்தம் பெருமளவில் வெளியேறி இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். சிகிச்சையின்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிர் பிரிந்ததாகவும், உடன் இருந்த அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

தகவல் அறிந்த அமைச்சரின் குடும்பத்தினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தனர். அங்கு அவர்கள் அனைவரும் கதறி அழுதனர். கோபிநாத்துக்கு அஞ்சலிசெலுத்த பாஜக., தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு விரைந்துள்ளனர். அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, பாஜக., அலுவலகத்தில் வைக்கபபடும் என்று அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தைச் சேர்நதவர்: கோபி நாத் பாண்டுரங்க முண்டே (வயது 64) 1949ம் ஆண்டு பிறந்தார். பாஜக.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பிரதமர் மோடி அமைச்சரவையில் கடந்த 26ம் தேதி பொறுப்பேற்றார்.

இவர், மகாராஷ்டிர சட்டசபை உறுப்பினராக ஐந்து முறை (1980-1985, 1990-2009) இருந்துள்ளார். 1992-1995 ஆண்டுகளில் மகாராஷ்டிர சட்டசபையில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1995-1999ல் துணை முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார். 2009ம் ஆண்டு 15வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு லோக்சபா பா.ஜ., துணைத்தலைவராகப் பணியாற்றினார்.

Leave a Reply