மத்திய அமைச்சராக பதவி ஏற்ற பின்பு சென்னை வந்த தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு விமான நிலையத்தில் உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து காலை 10 மணிக்கு விமானம்மூலம் மீனம்பாக்கம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் 3 மாவட்டங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விமான நிலையத்தில் திரண்டு இருந்தனர்.

அவர்கள் மேளதாளம் முழங்க வரவேற்பு கொடுத்தனர். விமானநிலைய வரவேற்பு முடிந்ததும் பாஜக தலைமை அலுவலகம் சென்றார் பொன்.ராதாகிருஷ்ணன். அங்கு அவருக்கு பூரண கும்பமரியாதை வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய வெளியுறவுத் துறை நடவடிக்கையின் காரணமாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 33 தமிழக மீனவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவது பற்றியும், இலங்கையில் தமிழர்கள்மீதான தாக்குதல் பற்றியும் கேட்கிறீர்கள். நான் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் ஒருவேண்டுகோள் விடுக்கிறேன்.

மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு 6 மாதகாலம் அவகாசம் கொடுங்கள் 60 ஆண்டு காலம் காங்கிரஸ் நாட்டை சீரழித்துவிட்டது. அதில் இருந்து நாட்டை நிச்சயமாக மீட்பார். அதேபோல் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கும் இலங்கையில் வாழும் தமிழர் பிரச்சினைக்கும் நிரந்தரதீர்வு காணப்படும். தமிழகத்தை சேர்ந்த பாதிரியார் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது துரதிஷ்டவசமானது. அவரை பத்திரமாக மீட்க வெளியுறவுத் துறை தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. காவிரி நதி நீர் பிரச்சினையை பொறுத்தமட்டில் கடந்த பல ஆண்டுகளாக நமது உரிமைகளுக்காக போராடி வருகிறோம். நிச்சயமாக பிரதமர் மோடி நடு நிலையோடு அணுகி தமிழகத்துக்கான நீதியையும் உரிய நீரையும் பெற்றுத்தருவார். தமிழகத்தில் எங்கள் கூட்டணி கட்சிகளுக்குள் எந்த கருத்துவேறுபாடும் இல்லை. வருகிற 2016 சட்ட சபை தேர்தல் எங்களது இலக்காகும். அந்த தேர்தலில் எங்கள் கூட்டணி நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply