முன்பு, 1977இல் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசும், 1984இல் ராஜீவ் காந்தி தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசும் ஏற்படுத்தியதைவிடவும் அதிகமான எதிர்பார்ப்பை நரேந்திர மோடி அரசு மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. அதை நன்றாகவே உணர்ந்திருப்பதாலோ என்னவோ, பிரதமர் நரேந்திர மோடியும் தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் பதவியின் கௌரவத்தைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்துகிறார்.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தனது தாயாரிடம் ஆசி பெற்றது, கங்கையில் ஆரத்தி காட்டி பூஜை செய்தது, நாடாளுமன்றத்தை விழுந்து வணங்கி ஜனநாயகத்தின்மீது தனக்கிருக்கும் பக்தியை வெளிப்படுத்தியது, பதவி ஏற்புக்கு அண்டை நாட்டு அதிபர்களை அழைத்து நேசக்கரம் நீட்டியது என்று ஒன்றன்பின் ஒன்றாக அதுவரை ஊடகங்கள் ஏற்படுத்தியிருந்த தோற்றங்களை அவர் உடைத்தெறிந்தது மக்கள் மன்றத்தில் அவரது செல்வாக்கைப் பல மடங்கு உயர்த்திவிட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் வெறும் நாடகங்களாகவோ, ராஜதந்திர நடவடிக்கைகளாகவோ கருத முடியாது. நரேந்திர மோடி என்கிற மனிதருடைய ஆத்மார்த்தமான உணர்வின் நிஜ வெளிப்பாடுகளே!

பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நரேந்திர மோடியின் நடவடிக்கைகள் அவரை மேன்மேலும் உயர்த்தி விட்டிருக்கின்றன. பிரதமராகப் பதவி ஏற்றதும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மரியாதை நிமித்தம் அவரது இல்லத்தில் சந்தித்து அளவளாவியதும், சௌத் பிளாக்கிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நுழைந்து தனது நாற்காலியில் அமர்வதற்கு முன்னால், அங்கிருந்த அண்ணல் காந்தியடிகள் படத்துக்கு மலர் தூவி வணங்கியதும், மோடி எதிர்ப்பாளர்களையே வியப்படையச் செய்த நிகழ்வுகள்.

தனது அமைச்சரவையில் அரசியல் வாரிசுகளுக்கு இடமளிக்க உறுதியாக அவர் மறுத்ததும், ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்களை சேர்த்துக் கொள்ளாமல் தவிர்த்ததும், உறவினர்களை உதவியாளர்களாக நியமிக்கக் கூடாது என்று அமைச்சர்களுக்கு உத்தரவிட்டதும், காலில் விழும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதும் பாராட்டுக்குரியவை; யாரும் இதுவரை செய்யத் துணியாதவை.

இதுவரை எத்தனையோ தலைவர்கள் பிரதமர் நாற்காலியை அலங்கரித்திருக்கிறார்கள். கலப்படமற்ற ஜனநாயகவாதி என்று பெயரெடுத்த பண்டித ஜவாஹர்லால் நேருவும், பழுத்த காந்தியவாதி என்று போற்றப்படும் மொரார்ஜி தேசாயும், கீழ்த்தர விளம்பரங்களை விரும்பாதவர் என்று கருதப்படும் அடல் பிகாரி வாஜ்பாயியும்கூட, தங்களைப் பற்றிய பதிவுகள் சரித்திரப் புத்தகங்களில் வருவதைத் தடுத்ததில்லை. "ஒருவர் வாழும்போது அவர் பற்றிய கட்டுரைகள் பள்ளிப் பாடப்புத்தகங்களில் வரவேண்டிய அவசியமில்லை' என்று துணிந்து கூறிய முதல் பிரதமர் நரேந்திர மோடியாகத்தான் இருப்பார். தனது செயல்பாடுகளால் சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டுமே தவிர, பதவியால் சரித்திரத்தில் பதிவாவதை பிரதமர் நரேந்திர மோடி விரும்பாதது பாராட்டுக்குரியது மட்டுமல்ல, நல்லதொரு முன்னுதாரணமும்கூட!

பிரதமர் நரேந்திர மோடியின் இன்னொரு கருத்து மெச்சத் தகுந்தது. எல்லா அமைச்சர்களிடமும், துறைக்குப் பொறுப்பான செயலர்களிடமும் மாநில முதல்வர்களைக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கும்படி அவர் வற்புறுத்துவதாகத் தெரிகிறது. இதுவரை பிரதமராக இருந்தவர்கள் தில்லியிலிருந்து மாநிலங்களைப் பார்ப்பவர்களாகவும், தங்களை ஒட்டுமொத்த இந்தியாவின் சக்ரவர்த்தியாகக் கருதுபவர்களாகவும் இருந்தனர். இப்போது மூன்று முறை மாநில முதல்வராக இருந்த ஒருவர், ஒட்டுமொத்த இந்தியாவின் ஏகோபித்த ஆதரவுடன் பிரதமராகி இருப்பதால், அவரது பார்வையே மாறுபட்டதாக இருக்கிறது. மாநிலங்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களைத் தீட்டும் நடுவண் அரசாக நரேந்திர மோடியின் அரசு இருக்கும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது.

நரேந்திர மோடி அமைச்சரவையில் ஐந்து முன்னாள் முதல்வர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு மாநிலங்களின் பிரச்னைகள் தெரியும். மத்திய அரசு எப்படிச் செயல்பட்டால் மாநிலங்கள் தடையேதும் இல்லாத வளர்ச்சியை அடைய முடியும் என்பதும் தெரியும். பிரதமர் நேருவின் காலத்தில் இருந்ததுபோல, மாநிலங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவற்றின் கருத்தறிந்து திட்டங்களைத் தீட்டவும் நரேந்திர மோடி அரசும் முற்படுமானால், அதுதான் உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலான ஆட்சியாக இருக்கும்.

தொடக்கம் நன்றாகவே இருக்கிறது. இனி தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில்தான் பிரதமர் மோடியின் சாமர்த்தியம் வெளிப்படும்!

நன்றி; தினமணி

Tags:

Leave a Reply