நாட்டின் நிதி நிலையை மேம்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜியில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

முந்தைய அரசு ஒன்றும் இல்லாமல் நாட்டை விட்டுப்போன நிலையில், நான் பொறுப்புக்கு வந்திருக்கிறேன். அவர்கள் எல்லாவற்றையும் காலியாக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள். நாட்டின் நிதி நிலை அடியோடு பாதித்திருக்கிறது.

நாட்டின் நிதி நிலைமையை சரிசெய்வதற்கு வரும் ஒன்றல்லது இரண்டு வருடங்களில் கடுமையான, வலுவான நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது அவசியம் ஆகிறது. இது தான் நாட்டில் மீண்டும் தன்னம்பிக்கையை மீட்டு, ஊக்கப்படுத்தும். ஆனால் கடுமையான நடவடிக்கை எடுக்கிற போது, அது எல்லாதரப்பிலும் வரவேற்பை பெறாது.

எனது நடவடிக்கைகள் நாட்டுமக்கள் என் மீது காட்டிய மகத்தான அன்பில் வடுவை ஏற்படுத்தும் என்பதை நான் அறிவேன். அதேநேரத்தில், நான் எடுக்கிற நடவடிக்கைகளால் நாட்டின் நிதிநிலைமை சரியாகும் என்பதை என் சகநாட்டு மக்கள் உணர்கிறபோது, அந்த அன்பை திரும்பவும் பெறுவேன்.

மற்றொரு பக்கம், இந்த கடுமையான நடவடிக்கைகளை நான் எடுக்கா விட்டால், நாட்டின் நிதி நிலை மேம்படாது. என்னென்ன நடவடிக்கை தேவையோ அவற்றை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

மோடியையும், பாஜக.,வையும் புகழ்ந்துரைப்பது நாட்டுக்கு உதவுவதாக அமையாது. மோடி துதிபாடுவது நிலைமையை முன்னேற்றும் என்பதற்கு உறுதிகிடையாது. நிதி நிலவரத்தை சரி செய்வதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Leave a Reply