முதல்வர் தலையிட்டு இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ் குமார் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய உத்தரவிட வேண்டும் என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம. கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :

வேலூரில் இந்து முன்னணி மாநிலச்செயலாளர் வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு முடியாத நிலையில் திருவள்ளூர் மாவட்ட இந்துமுன்னணி தலைவர் சுரேஷ் குமார், புதன்கிழமை (ஜூன் 18) இரவு அம்பத்தூரில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளையப்பனை கொன்ற கொலையாளிகள் கைதுசெய்யப்பட்டாலும், கொலைக்கு உடந்தையானவர்களும், கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்தவர்களும் வெளியில்தான் இருக்கிறார்கள் என்பதை இந்தக்கொலை மூலம் பகிரங்கப் படுத்தியிருக்கிறார்கள்.

21 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த குற்றவாளியை பிடித்த உடன் ஜாமின்கிடைக்கும் அளவுக்கு தமிழகத்தில் காவல் துறையின் செயல்பாடு இருக்கிறது .

சுரேஷ்குமார் கொலைவழக்கில் முதல்வர் ஜெயலலிதா நேரடியாக தலையிட்டு குற்றவாளிகளையும், அவர்களுக்கு உடந்தையானவர்களையும் கைதுசெய்து தண்டிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கொலை செய்யப்பட்ட சுரேஷ் குமார் அனைவருக்கும் உதவும் பண்பாளர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர், சமுதாய பணிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டவர். அவரது இழப்பு சமுதாயத்துக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மா நற்கதி அடைய தமிழகம்முழுவதும் திருக்கோயில் கோபுரங்களில் மோட்ச தீபமேற்றி பிரார்த்தனை செய்யவேண்டும் என இராம. கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply