முந்தைய ஐ.மு.,கூட்டணி அரசில், மத்திய அமைச்சர்களின் தனிசெயலர்களாக இருந்த யாரையும், புதிய மத்திய அமைச்சர்களின் தனிசெயலர்களாக நியமிக்க கூடாது’ என்று , மத்திய அமைச்சரவை செயலருக்கு, பிரதமர் நரேந்திரமோடி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:புதிய அமைச்சர்களின் தனிசெயலர்கள் நியமனம் தொடர்பாக, தற்போது, பிரதமர் பிறப்பித்துள்ள வாய்மொழி உத்தரவு, விரைவில் முறையான உத்தரவாக, அனைத்து அமைச் சர்களின் அலுவலகங்களுக்கும், மத்தியபணியாளர் நலத் துறையால் அனுப்பி வைக்கப்படும்.முந்தைய அரசில், வெளியுறவு அமைச்சராக பணியாற்றிய, சல்மான் குர்ஷித்தின் தனிசெயலராக பணிபுரிந்த, ஐ.பி.எஸ்., அதிகாரியான, அலோக்சிங், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் தனிசெயலராக நியமிக்கப்படலாம் என, தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த நியமனத்தை பிரதமர் மோடி நிறுத்திவைத்துள்ளார்.

முந்தைய அரசில் அமைச்சர்களாக இருந்த சசிதரூர் மற்றும் சந்திரேஷ் குமார் கடோச் ஆகியோரிடம், தனி செயலர்களாக பணியாற்றிய, அபினவ்குமார் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோரை, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண்ரிஜிஜு மற்றும் வெளியுறவு இணை அமைச்சர் விகே.சிங்கிற்கு தனி செயலர்களாக நியமிக்கும் பரிந்துரைக்கு, பிரதமர் அலுவலகம் ஒப்புதல் வழங்கவில்லை.இதையடுத்தே, முந்தைய அமைச்சர்களிடம் தனிசெயலர்களாக பணியாற்றியவர்களை, புதிய அமைச்சர்களின் செயலர்களாக நியமிக்கக்கூடாது என, அமைச்சரவை செயலருக்கு, பிரதமர் மோடி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய பணியாளர் நலத்துறை, ஏற்கனவே உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், அமைச்சர்களின் தனி அதிகாரி மற்றும் சிறப்புபணி அதிகாரி போன்ற நியமனங்களை மேற்கொள்ளும் போது, அமைச்சரவை நியமனகுழுவின் ஒப்புதலை பெறவேண்டும் என, தெரிவித்துள்ளது.இவ்வாறு, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply