சாலைவிபத்தில் உயிரிழந்த பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவின் வாரிசுகள் தேர்தலில் போட்டி யிட்டால் அவர்களுக்கு எதிராக தேசியவாத காங்கிரசின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் என அக்கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் பீட் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நரேந்திரமோடி மந்திரி சபையில் ஊரக வளர்ச்சிதுறை மந்திரியாக பதவி ஏற்ற கோபிநாத் முண்டே டெல்லியில் நடந்த கார்விபத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு மும்பையில் அனைத்துகட்சிகள் சார்பில் இரங்கல்கூட்டம் நடந்தது. இதில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி இரானி, இந்திய குடியரசுகட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே, கோபிநாத் முண்டேயின் மகள் பங்கஜா எம்எல்ஏ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசுகையில், கோபிநாத் முண்டே இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அந்த இடத்தில் அவரதுமகள் பங்கஜா இருக்கிறார். தந்தையின் வெற்றிடத்தை மகள் பங்கஜா நிச்சயம் நிரப்புவார் என்றார்.

சரத் பவார் பேசுகையில், கோபிநாத் முண்டேயின் துயர் மரணத்தால் பீட்தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த இடைத்தேர்தலில் கோபிநாத் முண்டேயின் குடும்ப உறுப்பினர் யாராவது போட்டியிட்டால், அவரை எதிர்த்து எங்களது கட்சி வேட்பாளரை நிறுத்தாது என்றார்.

Leave a Reply