பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக முடிவு செய்துள்ளதாக அம்மாநில முன்னாள் துணைமுதல்வர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது . நிதிஷ் குமார் முதல்வராக இருந்தார். மக்களவை தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து . இதற்கு பொறுப்பு ஏற்று முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ், கடந்த மே மாதம் விலகினார். அவரது ஆதரவாளர் ஜிதன் ராம்மன்ஜி தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த மே மாதம் 23ம் தேதி புதிய அரசுமீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் மற்றும் லாலுகட்சி ஆதரவுடன் நம்பிக்கை தீர்மானத்தில் ராம்மன்ஜி வெற்றிபெற்றார். இந்நிலையில், கடந்த வாரம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் ராம்மன்ஜியின் தலைமையை பிடிக்காத ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 18 எம்எம்ஏக்கள், கட்சிக்கு எதிராக வாக்களித்தனர். இதைதொடர்ந்து, ஐக்கிய ஜனதா தள அரசு மைனாரிட்டி அரசாக மாறிவிட்டதாக எதிர்கட்சியான பாஜ குற்றம் சாட்டியுள்ளது.

அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும் பாஜ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி அளித்த பேட்டி:ராம் மன்ஜி அரசு கடந்த மே 23ம்தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. அரசுக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.,க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

லாலு கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்களும் ஆளும்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அரசுக்கு ஆதரவு அளிப்பதாக லாலுகட்சி அறிவித்துள்ளது. இருப்பினும், அவர்கள் எழுத்து பூர்வமாக கவர்னரிடம் கடிதம் கொடுக்கவில்லை. புதிதாக நம்பிக்கைவாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அரசு பிழைப்பது சந்தேகம். பீகார் சட்டமன்ற கூட்டதொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டதொடரில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.என்று மோடி கூறினார்.

Leave a Reply