மத்தியில் நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றபின்பு பல அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறார். குறிப்பாக ஆடம்பர வீண்செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைப்பிடிக்க மத்திய அமைச்சர்களுக்கும் , அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.

மத்திய அமைச்சர்கள் தங்களது உதவியாளர்களை நியமிக்க கட்டுப்பாடுவிதித்தார். அதன்படி பிரதமர் அலுவலகம் தான் மந்திரிகளின் உதவியாளர்களை நியமனம்செய்யும் என்றும், உறவினர்களை உதவியாளர்களாக நியமிக்கக் கூடாது, தகுதி அடிப்படையில்தான் நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

தற்போது அரசுபணம் வீணாவதை தடுக்க மத்திய மந்திரிகள் புதியகார்கள் வாங்கவும் மோடி தடை விதித்துள்ளார். பொதுவாக புதிதாக மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்றதும் அவர்கள் பயன்படுத்த புதியகார்கள் வாங்குவது வழக்கம். தற்போது அந்த நடைமுறையை கைவிட்டு ஏற்கனவே உள்ள அரசு கார்களையே பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மத்திய மந்திரிகளுக்கும் மோடி தகவல் அனுப்பியுள்ளார். மேலும், விலைவாசி உயர்வை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மந்திரிகள் ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட செலவினங்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதல் பெறவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது போன்று மந்திரிகள் ஆலோசனை கூட்டங்களை நட்சத்திர ஓட்டல்களில் நடத்தக் கூடாது என்றும், அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர்வகுப்பில் பயணம் செய்யக்கூடாது என்றும் மோடி ஏற்கனவே உத்தரவிட்டார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக அரசு ஊழியர்களை தேர்வுசெய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply